Main Menu

மீண்டும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதாக ஈரானிய கடற்படை அறிவிப்பு?

நேற்று முழுமையாகத் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை, இன்று மீண்டும் மூடப்பட்டுள்ளதாக ஈரானிய கடற்படை அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் துறைமுக முற்றுகை தொடர்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணித்துக்கொண்டிருந்த வணிகக் கப்பல்களுக்கு, ஈரானிய கடற்படை வானொலி தகவல் ஊடாக அவசரச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், “ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டுள்ளது, எந்தக் கப்பல்களும் கடந்து செல்ல அனுமதி இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச கப்பல் போக்குவரத்து தகவல் உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரான் தனது வான்பரப்பு மற்றும் நீரிணையைத் திறப்பதாக அறிவித்திருந்த போதிலும், ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையைத் தளர்த்தப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் இந்த ‘கடல்சார் கொள்ளை’ மற்றும் முற்றுகை தொடர்வதால், நீரிணையின் கட்டுப்பாடு மீண்டும் பழைய நிலைக்கு (கடுமையான இராணுவக் கண்காணிப்பு) கொண்டுவரப்படுவதாக ஈரானின் ‘காதம் அல்-அன்பியா’ (Khatam Al-Anbiya) இராணுவக் கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது.

இந்தத் திடீர் அறிவிப்பைத் தொடர்ந்து, நீரிணையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சுமார் 5க்கும் மேற்பட்ட எரிபொருள் தாங்கிக் கப்பல்கள் (கிரேக்கம் மற்றும் இந்தியக் கப்பல்கள் உட்பட) தமது பயணத்தை ரத்து செய்துவிட்டுத் திரும்பியுள்ளன.

ஈரானில் 10 நாள் போர்நிறுத்தம் அமுலில் உள்ள போதிலும், ஹோர்முஸ் நீரிணை விவகாரம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் பெரும் முட்டுக்கட்டையாக உருவெடுத்துள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் சிக்கல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.