Main Menu

ஈரானிய துறைமுகங்களுக்கு அமெரிக்கா முற்றுகை: சர்வதேச கடற் பகுதியில் பதற்றம் – ஈரான் கடும் எச்சரிக்கை

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடல்வழித் தடை ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் பொருளாதாரத்தை முடக்கவும், அவர்கள் ஹோர்முஸ் நீரிணையில் வசூலிக்கும் கட்டணங்களைத் தடுக்கவும் இந்த அதிரடி நடவடிக்கையை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தத் தடையை மீறும் அல்லது அமெரிக்கக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் எவரும் கடுமையாகத் தாக்கப்படுவார்கள் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த தடை அமெரிக்க நேரப்படி இன்று முற்பகல் 10 மணிக்கு அதாவது இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு நடைமுறைக்கு வந்துள்ளது.

இது சர்வதேச எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதேவேளை தடையை வெற்றிகரமாகச் செயல்படுத்தத் தேவையான போதிய படைகளும் தளவாடங்களும் அமெரிக்காவிடம் இருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்பின் முடிவுகளுக்கு இணங்க, ஈரான், தமது நிலைப்பாட்டை மாற்றும் வரை இந்தத் தடை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நீடிக்கப்படலாம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் கடற்கொள்ளைக்கு ஒப்பானது என்று ஈரானின் புரட்சிக்கர காவல்படை விமர்சித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி வழங்கப்படும் என்றும் ஈரானிய புரட்சிக்கர காவல்படை எச்சரித்துள்ளது.