நாம் விரும்பாத நிலையிலும், நாடு ஒருவிதமான போர் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது – சுனில் வட்டகல
நாம் விரும்பாத ஒரு சூழலுக்கு மத்தியிலும், நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
யார் எப்போது எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களாக மாறுவார்கள் என்பதை எதிர்வு கூற முடியாத ஒரு நிலைமை உலகில் உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ‘IRIS Dena’ கப்பல் சம்பவம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும் என பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கூறியுள்ளார்.
“கராபிட்டிய வைத்தியசாலைக்கு திடீரென ஏற்க நேரிட்ட பொறுப்பைப் போன்ற ஏனைய பொறுப்புகளை யார், எப்போது, எவ்வாறு ஏற்க நேரிடும் என்பதை எம்மால் ஊகிக்க முடியாது.
இவ்வாறானதொரு நிலைமை எமது நாட்டின் பொதுமக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை எம்மால் முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் கராபிட்டிய வைத்தியசாலை இந்த யுத்தத்தினால் சடலங்களால் நிரம்புவதற்கு ஒரு நாளே போதுமானதாக இருந்தது. இதனால்தான் நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு உபாயங்களைப் பயன்படுத்த வேண்டும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் எமக்கு ‘அயர்ன் டோம்’ (Iron Dome) பாதுகாப்பு கவசம் கிடைத்துவிடப் போவதில்லை. ஆனால், எம்மால் முடிந்தவரை தயாராவதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும்.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
