Main Menu

இலங்கை அருகே ஈரானிய போர் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் – 100க்கும் மேற்பட்டவர்கள் மாயம்

இலங்கையை அண்மித்த கடலில் மூழ்கிய ஈரானிய கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் 180 பேர் வரையில் இருந்ததாகவும், 78 மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 101 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கடல் எல்லைக்கு அண்மித்து காலியில் இருந்து 40 மைல் தொலைவில் இன்று அதிகாலை ஈரானிய போர்க்கப்பல் விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர், கப்பல் விபத்துக்குள்ளான பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விமானப்படை கண்காணிப்பு விமானம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரானிய கடற்படைக் கப்பலின் பணியாளர்கள் இப்போது இலங்கை கடற்படையின் மீட்புக் குழுக்களால் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை என்றாலும், உயிர்களைக் காப்பாற்றுவது ஒரு பொறுப்பு என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும், இந்த விவகாரம் சர்வதேச மரபுகளின்படி கையாளப்படுகிறது என்றும் கூறினார்.

இன்று காலை 5.08 மணியளவில் கடற்படைக்குக் கிடைத்த தகவலை தொடர்ந்து, மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.