Main Menu

அமெரிக்கா கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்தும் வரை உலகம் பாதுகாப்பாக இருக்காது – ட்ரம்ப்

அமெரிக்கா கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்தும் வரை உலகம் பாதுகாப்பாக இருக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், நோபல் அமைதி பரிசு தமக்கு நிராகரிக்கப்பட்டதன் பின்னர், இனி அமைதியைப் பற்றி பரப்புரை செய்யவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை கைப்பற்றும் தனது நோக்கங்களை மீண்டும் வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, தனது கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளின் மீது கூடுதல் சுங்க வரிகளை விதிப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, கிரீன்லாந்து மீது சீனா மற்றும் ரஷ்யா ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வன்முறையைப் பயன்படுத்துவாரா என்பது குறித்து ட்ரம்ப் தெளிவான பதிலை வழங்கவில்லை.

டென்மார்க்குடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் இதுவரை எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்பதே தற்போதைய நெருக்கடிக்குக் காரணம் என அவர் கூறியுள்ளார். கிரீன்லாந்து மீது இராணுவ நடவடிக்கை சாத்தியமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளிக்க மறுத்துள்ளார்.

அத்துடன், கிரீன்லாந்து விவகாரத்தில் தலையிடுவதற்குப் பதிலாக, ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ கூட்டாளிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு இருந்தபோதிலும், கிரீன்லாந்தை “ஏதேனும் ஒரு வழியில்” கைப்பற்றுவோம் என்ற மிரட்டல்களை ட்ரம்ப் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார். கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடு தொடர்பாக ஒப்பந்தம் எட்டப்படும் வரை, டென்மார்க் மற்றும் மேலும் ஏழு ஐரோப்பிய நாடுகளின் மீது 10 சதவீத சுங்க வரி விதிக்கப்படும் என அவர் கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.

மேலும், நோபல் அமைதி பரிசு நிராகரிக்கப்பட்ட பின்னரே தாம் உலக விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியதாகவும், இனி அமைதியைப் பற்றி பேச வேண்டிய கட்டாயம் இல்லை என்பதை உணர்ந்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில், நோர்வே மீதும் 10 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவுடனான முரண்பாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃப்ரெடெரிக் நீல்சன் தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்றும் விருப்பம் குறித்து வெளியிட்ட கருத்துகள் தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிரீன்லாந்தின் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு எதிரான சுங்க வரி மிரட்டல்கள் காரணமாக, அமெரிக்கா – ஐரோப்பா உறவுகளில் பதற்றம் நிலவி வருவதாகவும் அவர் கூறினார். இருப்பினும், இந்த அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் எனவும், உரையாடல், பரஸ்பர மரியாதை மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் உறுதியாக நிற்போம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பல நாடுகள் மற்றும் உலகத் தலைவர்கள் கிரீன்லாந்துக்கு ஆதரவு தெரிவித்து வருவது மிகவும் முக்கியமானதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது, கிரீன்லாந்து ஒரு ஜனநாயக சமூகமாகவும், தன் எதிர்காலம் குறித்து தானே முடிவெடுக்க உரிமை கொண்ட நாடாகவும் இருப்பதற்கான தெளிவான அங்கீகாரம் என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, கிரீன்லாந்திலும் டென்மார்க்கிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் வலுவான மற்றும் மரியாதைக்குரிய ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளதாகவும், பலர் அமைதியான முறையில் தங்கள் நாட்டின் மீது கொண்ட அன்பையும் ஜனநாயகத்திற்கான மரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும் கிரீன்லாந்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.