அவுஸ்திரேலிய துப்பாக்கிச்சூடு ; துப்பாக்கிதாரிகள் பிலிப்பைன்ஸுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பில் விசாரணை
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட இரண்டு துப்பாக்கிதாரிகளும் கடந்த நவம்பர் மாதம் பிலிப்பைன்ஸுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிட்னி நகரின் மிகவும் பிரபலமான போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (14) மாலை யூதர்களின் ஹனுக்கா நிகழ்வில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 40 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் 10 வயது சிறுமியும் அடங்குவார். மூன்று பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டை இருவர் மேற்கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதோடு, மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிதாரிகளில் ஒருவர் 50 வயதுடைய தந்தையும் மற்றையவர் 24 வயதுடைய மகனும் ஆவர். இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த நவம்பர் மாதம் இரு துப்பாக்கிதாரிகளும் பிலிப்பைன்ஸுக்குப் பயணம் செய்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
“அவர்கள் ஏன் அங்கு சென்றார்கள், அதன் நோக்கம் என்ன ? மற்றும் அவர்கள் அங்கு இருந்தபோது எங்கு சென்றார்கள் ? என்பது தொடர்பாக தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் ஆணையாளர் மால் லான்யோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய வாகனத்தில் “வீட்டில் தயாரிக்கப்பட்ட” இரண்டு இஸ்லாமிய அரசு இயக்கத்தின் கொடிகள் மற்றும் வெடி பொருட்கள் (IEDகள்) கண்டுபிடிக்கப்பட்டதாகவும் லான்யோன் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...