Main Menu

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய மாவீரர்கள் நினைவேந்தல் நாள்

தமது தாயகத்தின் விடுதலைக்காக போராடி, உயிர் ஈகை செய்த, இந்த விடுதலை போராட்ட மறவர்களுக்கு, வீர மரியாதை, வீரவணக்கம் செலுத்தும் நாள்.

ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகத் போராடி, அந்த இலட்சியத்தை அடைவதற்காக தமது வாழ்வைத் தியாகம் செய்த மாவீர்கள் மகத்தானவர்கள். தாயக மக்களின் சுதந்திரப் போராட்டத்தை இந்த பூமிப்பந்திலே முதன்மையான போராட்டமாக முன்னிறுத்திய உத்தமர்கள்.

மனித சுயத்தின் ஆசைகளைத் துறந்து, மானுடத்தின் உரிமைகளுக்கான பொதுநல சத்திய இலட்சியத்திற்காகப் போராடி, சாவை தழுவிய புனிதர்கள்.

இறந்தவர்களுக்காக அழுபவர்கள் மத்தியில், அழுபவர்களுக்காக இறக்க துணிந்தவர்கள் .

ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல..!

அந்த சாவு ஒரு சரித்திர நிகழ்வு..!

ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெரும் அற்புத நிகழ்வு..!

உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை..!

அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை..!

அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்று சக்தியாக மற்றவர்களை பற்றி கொள்கிறது..!

ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவை தட்டியெழுப்பி விடுகிறது..!

நமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும் நமது மண்ணின் விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான தியாகங்களையும் நினைவு கூறும் இப்புனித நாளில்,

எத்தகைய இடர்களையும், எத்தகைய துன்பங்களையும், எத்தகைய சவால்களையும், எதிர்கொண்டு அகிம்சை முறையில் நமது தாயகத்தில் சுதந்திரத்தை வென்றேடுப்போமென இத்தருணத்தில் உறுதி ஏற்போம்.

களத்தில் ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் மட்டும் போராளிகள் அல்ல

எங்கு தமது இனம் அழிக்கப்படுகிறதோ

அதை கண்டு இங்கு எவரேல்லாம் சினம் கொண்டு சீறி எழுகிறார்களோ

அவர்களும்  போராளிகளே.

இவர்கள் கண்ட கனவை நனவாக்க, வீழ்ந்து கிடக்கும் நம் மொழி, இனம், சமயம், மண், உரிமை, உடமை மீட்பதற்கு நாம் தமிழராய் ஒரே சிந்தனையில் தமிழர்கென தனி தமிழ் ஈழத்தை வென்றெடுப்பொம்.

விழ விழ எழுவோம், ஒன்பதாய் முளைவோம், வீழ்ந்தாலும் மடிந்தாலும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை..!

மண்ணுக்காக வாழ்ந்து பார்..மரணத்திலும் சரித்திரம் படைப்பாய்..!

வீரவணக்கம்..! வீரவணக்கம்..!

***************************************************************************************

எம் மண்ணுக்கு வீரம் விளைந்து விட்டது என்பதை, உரத்த குரலெடுத்து உலகுக்குச் சொல்லிய நாள்.

அடக்கிவைத்து, எம்மை இனியும் ஆளமுடியாதென்று அந்நியருக்கு அறைகூவல் விடுத்த நாள்.

உயிர்கொடுத்தே உரிமையைப் பெறமுடியும் என்பதை முதற்சாவு மூலம் முரசறைந்த நாள்.

ஆம்! மாவீரர்நாள் – தமிழீழத்தின் தேசிய நாள்.

சத்தியநாதன் என்ற லெப். சங்கர், விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் போராட்ட வரலாற்றில் முதற்சாவை இன்றுதான் சந்தித்தான்.

ஒரு காலத்தில் எதிரி எட்டி எட்டி உதைக்கவும், உதைத்த காலுக்கு முத்தமிட்டுக் கிடந்தது எங்கள் இனம்.

காலிமுகத்திடலிலும், கச்சேரி வாசலிலும் ஆயுதமற்று அறப்போர் செய்த எங்கள் இனத்தைக் குண்டாந்தடியாலும், துப்பாக்கிப்பிடியாலும் தாக்கித்தூக்கியெறிந்தது சிங்கள பேரினவாதம்.

யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்குப் பஸ்சில் புறப்பட்டால் பத்து இடத்திலாவது தமிழரை இறக்கி நீங்கள் யார்? நீங்கள் யார்? என்று கேட்பதுபோல அடையாள அட்டை பார்ப்பார்கள். வரிசையிலே நிற்க வைத்துக் கேள்விகள் கேட்பார்கள். எங்கள் தங்கைகளைத் தடுத்து வைத்து குண்டு கொண்டு போகின்றாயா என்று இரட்டை அர்த்தத்தில் பரிகசிப்பார்கள்.

இத்தனையையும் கூனிக் குறுகிப் பொறுத்துக்கொண்டு என்ன செய்வதென்று வழிதெரியாது இருளில் கிடந்தது எங்கள் இனம்.

கார்த்திகை 26 ஆம் நாள் இவற்றையெல்லாம் இல்லாமற் செய்யும் வழிகாட்டவென்று வல்வைக் கடற்கரையில் ஒரு பிள்ளை விழிதிறந்தது.

கார்த்திக 27ஆம் நாள் இவற்றையெல்லாம் இல்லாமற் செய்ய இரத்தம் சிந்தாமல், உயிரை விலைகொடுக்காமல் விடிவில்லை என்பதைக்கூறி ஒரு பிள்ளை விழி மூடியது.

இங்கு ஜனனமும், மரணமும் விடுதலைக்கான விளைபொருட்களாயின.

இன்று பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள், தமிழீழ விடுதலையென்னும் தங்கள் கனவுகள் நனவாகும் என்ற நம்பிக்கையில், சுதந்திரம் பெறும் நாளில் எங்கள் தலைவன் ஏற்றப்போகும் தேசியக்கொடி காற்றில் அசையும் காட்சியைக் காண்பதற்காகக் கல்லறைக்குள்ளே கண்மூடிக் காத்திருக்கிறார்கள்.

தாங்கள் ஒப்படைத்துவிட்டுவந்த பணியைத் தங்கள் தோழர்கள் தோழிகள், தாங்கள் நேசித்த மக்கள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்று இலக்கை அடைவார்கள் என்ற நம்பிக்கையோடு விழிமூடிக் குழிகளுக்குள்ளே குடியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாவீரர் நாட்களிலும் நள்ளிரவில் கேட்கும் நாதமணிச் சத்தம், ‘விடுதலை பெற்றது தமிழீழம்’ என்பதைத் தங்களுக்கு வந்து சொல்லுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், தங்கள் கல்லறையில் நாங்கள் ஏற்றும் நெய்விளக்குச் சுடரில் தமிழீழத்தின் வரைப்படத்தையே கண்டு களிப்படைந்து கொண்டுமிருக்கின்றனர்.

மாவீரர் துயிலும் இல்லங்கள், மாவீரர்கள் புதைந்த இடங்களாக நாம் எண்ணக்கூடாது, தமிழீழம் என்று கிடைக்குமென்று ஏங்குபவர்கள் தூங்குமிடங்களாகக் கொள்வோம்.

அந்தப்புனித இடத்தில் பூக்களை வைப்பது மட்டுமல்ல எங்கள் கடமை. கூப்பிய கரங்களுடன், விழிசொரிவது மட்டும்தான் எங்கள் பணியாகக் கொள்ளல் ஆகாது.

தமிழீழத்தைப் பெற்று, மாவீரர்களின் தாளடியில் வைப்பதே நாங்கள் அவர்களுக்குச் செய்யும் வரலாற்றுக் கடமையாகும்.

அலங்கார வளைவுகள், அர்த்தராத்திரியில் நெய்விளக்குகள், கண்ணீர் மாலைகள் எல்லாம் சம்பிரதாயச் சடங்குகளாக மாறக்கூடாது.

அடுத்த மாவீரர்நாள் விடுதலைபெற்ற மண்ணிலென்று, நாங்கள் ஒவ்வொருவரும் சபதமேற்றுக் கொள்ளவேண்டும். இதையே இலக்காகக் கொண்டு நாங்கள் நகரத் தொடங்கவேண்டும்.

“விடிகின்றபோதில் போதாகி மலர்வீர மடிந்தும் மடியாத மாவீரர் நீவிர்”

நன்றி: மாவீரர் சிறப்பிதழ் (27.11.1995).

*********************************************************

காணிக்கை

காணிக்கையான! மாணிக்கங்களே..!

அஞ்சலிகள்…

அன்பானவர்களே…

ஆத்மார்த்த அஞ்சலிகள்…

உங்கள் தியாகம் சொல்லுந்தரமற்றது, உங்கள் தியாக அருவியில் திளைக்கிறோம், உங்கள் நினைவுகள் உள்ளத்தை ஊடறுத்து ஆன்மாவை அசைக்கிறது.

உங்கள் இழப்புக்கள் எங்களை மட்டுமல்ல எதிரிகளையும் கலங்கடிக்கிறது.

ஆம்…. நாம் கலங்கிக் கதறுகிறோம்….

எதிரி கதி கலங்கிச் சிதறுகிறான்….

ஆனால் அதேவேளை கலங்கும் எதிரி நிலைகொள்ள முடியாது தடுமாறுகிறான். நாமோ….உங்கள் கனவுகளை… உங்கள் எண்ணங்களை…. நனவாக்க உங்கள் நினைவிலேயே உங்கள் கல்லறைகளிலே கலக்கமே உறுதியாக நிமிர்கிறோம்.

இனிய தோழர்களே!

நீங்கள் எங்களைக் காக்கவென்றோ உயிர் போக்கினீர்கள் முன்சென்றீர், வழிசமைத்தீர்…

இந்தத் தமிழ் மண்ணுக்காக உங்கள் இன்னுயிரை ஈந்தீர்கள்

இளமை…. இது உங்களுக்காகவும் இயற்றப்பட்டதுதானே!

திருமணம் உங்களுக்காகவும் உள்ளதுதானே…

பாசம் உங்களிலும் பாசம் கொண்டதுதானே

பந்தங்களைத் துறக்க உங்களுக்கு நிர்ப்பந்தம் என்ன?

வாழ்வென்றால் உங்களுக்கு மட்டும் என்ன வேப்பங்காயா?

ஏன் வாழ்வினைத் துறந்தீர்கள்…?

தாழ்வெனப்படுவது தமிழைத் தாக்கியதால்த்தானே…!

அன்பானவர்களே…

கல்யாணம் கச்சேரி… பிள்ளை குட்டி… கடை காணி, படிப்பு உத்தியோகம், பரம்பரை கௌரவம், சாதிவெறி, பிரதேசப் பாகுபாடு என்று எல்லாமே ஊறிப்போன…சுயநலத்திலேயே தனது அடிப்படைகளைக் கட்டி எழுப்பும் தமிழினத்திலிருந்தா நீங்களும் பிறந்தீர்கள்…?

ஆச்சரியமாக உள்ளது. மேற்சொன்னவெல்லாம் நிறையவிருந்த அந்த இனத்தையே விடுதலையென்றும், தமிழ் என்றும், பொது நலமென்றும் புரட்சியென்றும் தொன்மையின் சிறப்பென்றும் சிந்திக்க வைத்துவிட்டீர்களே.

இதுதான் பெரியதோர் சகாப்தப் புரட்சி…

இந்தப் புரட்சியினை நிகழ்த்த தங்களது உயிரே அர்ப்பணம்

எனும் போதுதான் நெஞ்சு கனக்கிறது…. ஆத்மா அந்தரிக்கிறது. ஆனால்…

இழப்பின்றி ஒரு பெறுபேறு இல்லையே…

சுடச் சுடத்தான் தங்கம்…. படப்படத்தான் புரட்சி…

எரிப்பதை மறுத்தால் காடு கழனியாகுமா?

தெரிந்துகொண்டோம். தெளிந்துகொண்டோம்.

மாவீரர்களே! நீங்கள் இறக்கவில்லை இறவாத தமிழ் இரக்கக் கூடாது என்பதற்காய் உங்களையே ஆகுதியாக்கிக்கொண்டீர்களே…!

என்று வாழும் சிரஞ்சீவிகள் நீவிர்

தமிழீழத்தின் கடலும் காற்றும் உள்ளவரை நீங்கள் வாழ்வீர்கள்

கடலும் காற்றுமே உங்கள் பெயர் சொல்லும்…

நெஞ்சு கனக்கிறது. நினைத்தால் உங்கள் தியாகமே எங்கள் முன் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.

உங்கள் தியாக சிகரத்தைத் தொடுவதற்காகவே நாங்களும் விஸ்வரூபமெடுக்க எழுகிறோம்…

நாம் எழுகின்ற வீச்சிலே ஆயிரமாயிரம் பகைவீச்சுக்கள் பொடிபடுகின்றன.

விதையாகிப்போன வேங்கைகளே…!

நாம் மனந் தளர்கின்ற போதெல்லாம் உங்கள் உருவங்களும்…

உருவந்தெரியாது அருவமாகிப் போன உங்கள் பெயர்களும் எம்மைத் தட்டியெழுப்புகின்றன. எமது காயங்களுக்கு மருந்து தடவுகின்றன. ஆன்மாவுக்குள் ஆழ இறங்கி உசுப்பி விடுகின்றன. ஆயுதங்களை இறுகப்பற்றி எழுகின்றோம் உங்கள் எண்ணங்களை ஈடேற்றி முடிப்போம் என்ற உத்வேகத்துடன் எழுகின்றோம்… குருதி முழுதும் உடலெங்கும் ஊடறுத்துப்பாய… விழிகள் ஆக்ரோசத்துடன் விரிய… எம்மினிய தோழர்களே…. என்று கூவிக்கொண்டு எழுகிறோம் ஆத்மார்த்த தோழர்களே எழுகிறோம். விழ விழ எழுகிறோம்.

நீங்களே எமது எண்ணம், நீங்களே எமது வழிகாட்டி, நீங்களே எமது தீர்மானம்…

நீங்கள் பதித்த சுவடுகள்…

எம்மை வழி நடாத்தும் சுவடிகள்…

நன்றி: மாவீரர் சிறப்பிதழ் (27.11.1995).

பகிரவும்...