Main Menu

பிலிப்பைன்ஸில் முன்னாள் மேயர் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை

சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட, பிலிப்பைன்ஸின் பம்பன் நகர முன்னாள் மேயர் ஆலிஸ் குவோவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மணிலா நகரத்தில் உள்ள பாசிக் நகர பிராந்திய விசாரணை நீதிமன்றம் வியாழக்கிழமை (20) இத்தீர்ப்பினை அறிவித்துள்ளது.

ஆலிஸ் குவோவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், ஆலிஸ் குவோவுடன் சேர்த்து, அவரது குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவைச் சேர்ந்த ஆலிஸ் குவோ சட்டவிரோதமாக பிலிப்பைன்ஸ் குடியுரிமையை பெற்று, அந்நாட்டின் வடக்கு பிராந்தியமான பம்பன் நகரத்தின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியில் அமர்ந்தார்.

இதேவேளை அவர் சீனாவுக்கு சொந்தமான ஒரு சூதாட்ட நிறுவனத்தின் தலைவராகவும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சூதாட்ட நிறுவனத்தை நடத்திவந்ததன் மூலம் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா முதலான நாடுகளைச் சேர்ந்த 700க்கு மேற்பட்டோர் இணைய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

அத்துடன் அவர் சீனாவுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு, மேயர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதனையடுத்து, ஆலிஸ் குவோ மீது ஆட்கடத்தல், சூதாட்ட நிறுவனத்தை நடத்தி மோசடி செய்தமை, சீனாவுக்கு உளவு பார்த்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

அவ்வழக்கு விசாரணை தற்போது நிறைவடைந்த நிலையிலேயே பிலிப்பைன்ஸ் விசாரணை நீதிமன்றம் ஆலிஸ் குவோ உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

பகிரவும்...