Main Menu

“மன்னிப்புக் கோரி, இழப்பீடு வழங்குங்கள்”: ஜமால் கஸோக்கியின் மனைவி சவூதி இளவரசருக்குக் கோரிக்கை

2018 ஆம் ஆண்டு சவூதி முகவர்களால் தனது கணவரான ஊடகவியலாளர் ஜமால் கஸோக்கி படுகொலை செய்யப்பட்டமைக்காக  மன்னிப்பையும் இழப்பீடையும் வழங்குமாறு, அவரது மனைவி ஹனான் எலாட்ர் கஸோக்கி, சவூதி இளவரசரிடம் கோரியுள்ளார்.

ஜமால் கஸோக்கியின் கொலையை சவுதி இளவரசர் மொஹமட் பின் சல்மான் “ஒரு பெரிய தவறு” என்று கூறியதைத் தொடர்ந்து,  இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனது கணவரின் கொலையை நியாயப்படுத்த முடியாது என்றும், இந்த இழப்பு தனது வாழ்க்கையை “நாசம் செய்துவிட்டது” என்றும் அவர் X சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இஸ்தான்புலில் உள்ள சவூதி துணைத் தூதரகத்தில் ஜமால் கஸோக்கி கொல்லப்பட்டதன் பின்னர் முதல் முறையாக சவூதி இளவரசர் அமெரிக்காவும் விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, சந்தித்ததை தொடர்ந்து ஹனானின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

அவர் அமெரிக்க ஜனாதிபதியைக் குறியிட்டு X தளத்தில் இட்டுள்ள பதிவில் “எனது கணவரைக் கொலை செய்வதற்கு எந்த நியாயமும் இல்லை.

பட்டத்து இளவரசர் வருத்தம் தெரிவித்தார், எனவே அவர் என்னைச் சந்தித்து, மன்னிப்புக் கோரி, எனது கணவர் ஜமால் கஸோக்கியின் கொலைக்காக எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சவூதி இளவரசர் வொஷிங்டனுக்கு விஜயம் செய்வது தனக்கு “மிகவும் வேதனையானது” என்று முன்னதாக ஊடகமொன்றுக்கு ஹனான் கருத்து தெரிவித்தார்.

தனது கணவர் இறப்பதற்கு முன் இளவரசரின் அழைப்புக்காக காத்திருந்தார் என்றும், தனது நாட்டுக்கு நல்ல யோசனைகளைக் கொண்டிருந்தார் என்றும் கூறினார்.

ரியாத்துடன் உறவுகளை நாடும்போது வொஷிங்டன் “மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் அமெரிக்க விழுமியங்களைப் பார்க்க வேண்டும், வெறும் ஒப்பந்தங்கள் மற்றும் ஆயுதங்களை விற்பதில் மட்டும் கவனம் செலுத்தக் கூடாது” என்று அவர் தெரிவித்தார்.

ஜமால் கஸோக்கியின் கொலை

சவூதி அரச குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்த புகழ்பெற்ற சவூதி ஊடகவியலாளரான ஜமால் கஸோக்கி, 2017 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார்.

அங்கு, அவர் வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பத்தி எழுத்தாளராகப் பணியாற்றி, சவூதி இளவரசர் மொஹமட் பின் சல்மானின் அடக்குமுறைகள் மற்றும் யேமன் போர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்தக் கடுமையான விமர்சனங்களே அவர் இளவரசரின் கோபத்திற்கு ஆளாகி, கொலைக்கு வழிவகுத்ததாகக் கருதப்படுகிறது. இந்தக் கொலைச் சம்பவம்  2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 2 ஆம் திகதி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில் நடந்தது.

தனது வருங்கால மனைவியைத் திருமணம் செய்து கொள்வதற்கான ஆவணங்களைப் பெற ஜமால் கஸோக்கி துணைத் தூதரகத்துக்குச் சென்றபோது, அவருக்காக ஏற்கனவே காத்திருந்த 15 பேர் கொண்ட சவூதி முகவர்களின் குழுவால் அவர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார்.

பின்னர், அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஜமால் கஸோக்கி பத்திரமாக வெளியேறிவிட்டதாக சவூதி அரசாங்கம் மறுத்தது.

ஆனால், துருக்கி அதிகாரிகள் ஒலி மற்றும் காணொளி ஆதாரங்களை வெளியிட்ட பின்னர்,ஒரு சண்டையில் கொலை நடந்ததாக சவூதி முதலில் ஒப்புக்கொண்டு, பின்னர் அதைத் திட்டமிட்ட கொலை என்று ஒப்புக்கொண்டது.

இருப்பினும், இந்தக் கொலையைச் செய்ய இளவரசர் மொஹமட் பின் சல்மான் உத்தரவிட்டதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியது. ஆனால் சவூதி அரசாங்கம் அதனை மறுத்தது.

சவூதி அரேபியாவில் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கொலையில் தொடர்புடைய ஐந்து சவூதி பிரஜைகளுக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

பகிரவும்...