Main Menu

தமிழகத்தின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உதயம்

தமிழகத்தின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தனி மாவட்டம் வேண்டும் என்ற கால் நூற்றாண்டு கால கனவு நனவானதால் மயிலாடுதுறை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தை பிரித்து, தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும் வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு என மொத்தம் 5 மாவட்டங்கள் புதிதாக உதயமாகின.

புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்களும் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.