Main Menu

அரசியல் பழி வாங்கல்கள் குறித்த குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானோர் தொடர்பாக ஆராயும் குழுவின் முதன்மை அறிக்கை இன்று (புதன்கிழமை) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு தொக்கம் 2019 ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச மற்றும் அரை அரச சேவையில் நிர்வாக ரீதியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளான ஆறாயிரத்து 952 பேரில் இருவர் இதுவரை இக்குழுவில் மேன்முறையீடு செய்துள்ளனர்.

அதில், ஆயிரத்து 152 பேரின் மேன்முறையீடுகள் குறித்த விசாரணைகள், அவதானிப்புகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் என்பன இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2015-2019 காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றுள்ள விதம், குழுவில் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகள் குறித்து ஆராயும் போது தெளிவாகியதாக குழு உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு விளக்கினர்.

அரசியல் ரீதியில் பழிவாங்கல்களுக்கு உள்ளான அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுவது இக்குழுவின் கடமையாகும் என்றும், நிறுவன தலைவர்களுக்கு அறிவிக்கப்படும் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், அமைச்சரவைக்கு தெரியப்படுத்தி, அந்தந்த துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர்களினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

குழுவினால் இதுவரை ஆயிரத்து 152 மேன்முறையீடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, 484 அவதானிப்புப் கோப்புகள் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. விசாரணைக்காக குழுவிற்கு அழைக்கப்பட்ட மேன்முறையீடுகளின் எண்ணிக்கை 372 ஆகும்.

கொவிட்-19 காரணமாக 3 மாத காலமாக குழுவின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட போதிலும், இதுவரை தொடர்ந்து நடைபெற்றுவரும் விசாரணைகளுக்கு அமைய நிறுவனத் தலைவர்கள் 34 பேர் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் குழுவின் செயலாளர் சட்டத்தரணி சதுரிக்கா விஜேசிங்க இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

குழுவின் தலைவராக இதற்கு முன்னர் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கடமையாற்றியிருந்ததுடன், உறுப்பினர்களாக ஆரியரத்ன அருமப்பெரும, மஹிந்த செனவிரத்ன ஆகியோர் செயற்பட்டனர்.

குறித்த சந்திப்பில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் குழுவின் (2015-2019) உறுப்பினர்களான ஏ.ஆரியரத்ன, மஹிந்த செனவிரத்ன, குழுவின் செயலாளர் சட்டத்தரணி சதுரிக்கா விஜேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

பகிரவும்...