Main Menu

சீனாவில் 36 புதிய தொற்றாளர்கள் இனங் காணப் பட்டனர்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தோற்றுவாயான சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியுள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை அங்கு மீண்டும் 36 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

சீனத்தலைநகர் பீஜிங்கிலேயே இவ்வாறு புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை உருவாகியுள்ளதாக என்கிற அச்சம் எழுந்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் தோற்றம் பெற்றிருந்தாலும் அது இதுவரை உலகளவில் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை காவு கொண்டுள்ளது.

அமெரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற பல நாடுகளில் இதன் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில், மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகள் பல தற்போது வழமை நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், சீனாவில் மீண்டும் புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டமை, இன்னும் முன்னெச்சரிக்கையை ஒவ்வொரு நாடுகளும் பேண வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது.

சீனாவில் கொரோன வைரஸின் இரண்டாவது அலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு சீனத் துணை ஜனாதிபதி சன் ஷூன்லான் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பீஜிங் நகரின் மிகப்பெரிய வர்த்தக சந்தையான ஷின்ஃபாடியில் இருந்தே இந்த கொரோனா வைரஸ் மீண்டும் தோற்றம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. மொத்தமாக 79 தொற்றாளர்கள் அதனுடன் சம்பந்தப்பட்டதாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அதேபோல பீஜிங்கில் இருந்து பரவியதாக சந்தேகிக்கப்படும் தொற்றாளர்கள் அல்லது நோய்த்தொற்று சந்தேக நபர்கள் லயோனிங், ஹெபேய் மற்றும் சிசுவான் மாகாணங்களிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.

ஏறக்குறைய 2 மாதங்களின் பின் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் அனைத்து நாடுகளுக்கும் பெரும் எச்சரிக்கையை உண்டு பண்ணியிருக்கின்றது.

பகிரவும்...