தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்- அனந்தி கோரிக்கை!
கொரோனா வைரஸ் தாக்கத்தலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வடக்குமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று (சனிக்கிழமை) மாலை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், “இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக அச்ச நிலைக்குள் மக்கள் வாழ்கின்றார்கள்.
கொரோனா தாக்கத்தலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
காரணம், நீண்ட காலம் சிறையில் அவர்கள் வாழ்வது மட்டுமல்லாது இந்த வைரஸ் நோய்த் தாக்கம் சிறையில் ஒருவருக்கு ஏற்பட்டால் ஏனையவர்களைப் பாதுகாப்பது கடினமாகும்.
இட நெருக்கடியான இடத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களாக இவர்கள் இருப்பதனாலும், வயது, நோய், உடல் மற்றும் உளத்தாக்கம் இருப்பதாலும் இவர்களை இந்நோய் மோசமாகப் பாதிக்கும்.
உலகமே அச்சமுற்றுள்ள வேளையில் இவர்களுடைய குடும்பங்கள் விரக்தியுடனும் ஏக்கத்துடனும் தங்கள் அன்புக்குரியவர்கள் வருவார்கள் என வழிமேல் விழி வைத்து காத்து நிற்கின்றார்கள்.
இவர்களுடைய விடுதலை ஒரு நிபந்தனை அடிப்படையிலோ அல்லது பிணை அடிப்படையிலோ அமையலாம். முடியாதது என்று எதுவும் இல்லை. மனிதாபிமான நோக்கில் இலங்கை மாணவர்களை சீனாவில் இருந்து ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக இருந்து அழைத்துவர முடியுமானால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனை அடிப்படையில் விடுவிக்க முடியாது?
சர்வாதிகார அரசான ஈரான் அரசு தனது அரசுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த 20 ஆயிரம் கைதிகளை இந்த நெருக்கடியான சூழலில் விடுதலை செய்துள்ளது. ஏன் ஜனநாயக அரசாங்கம் என்று தன்னை வகைப்படுத்திக் கொண்ட இலங்கை அரசாங்கம் இவர்களை விடுதலை செய்ய முடியாது?
கடந்த ஏப்ரல் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்வர்களாக கருதப்பட்ட பலர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் ஏதோ ஒரு வகையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். எங்கள் உறவுகள் மட்டும் அதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் பல்லாண்டு காலம் சிறையில் உள்ளனர்.
எனவே தமிழருக்கு சட்டம், நீதியை வேறுவேறாகப் பாராது இன நல்லிணக்கம் பேண தமிழ் அரசியல் கைதிகளை இந்த நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பகிரவும்...