Main Menu

இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் வறுமையை ஒழிக்க உதவும் – பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவின் புதுமைக் கண்டுபிடிப்புகள் வறுமையை ஒழிக்க உதவுபவையாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் நரேந்தர மோடி இன்று சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த விழாவில் கலந்து கொண்டார்.

இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்திய ஹேக்கத்தான் தொழில் நுட்பபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

என்னைப் பொறுத்தவரை இங்கு கூடி இருப்பவர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான். முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹேக்கத்தான் வெற்றிக்கு உதவிய சிங்கப்பூர் கல்வி அமைச்சருக்கு நன்றி. ஹேக்கத்தான் என்பது இளம் தலைமுறையினரின் அறிவுத்திறனை வளர்க்கக்கூடியது. சிங்கப்பூரைப் போல பிற ஆசிய நாடுகளுடன் இணைந்து ஹேக்கத்தான் போட்டிகளை நடத்த வேண்டும்.

தமிழர்களின் காலை உணவான இட்லி, தோசை, வடை ஆகிய உணவுகள் உற்சாகம் தரக்கூடியவை. தமிழர்களின் விருந்தோம்பல் மிகச்சிறப்பானது. மாபெரும் பாரம்பரியம், மிகச் சிறந்த கலாச்சாரம்கொண்டது சென்னை.

கற்சிற்பங்கள் நிறைந்த மாமல்லபுரம் மிகவும் பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. இங்கு வந்திருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் மாமல்லபுரம் சென்று பார்வையிட வேண்டும்.

இந்திய பொருளாதாரம் 5 பிரில்லியன் டாலர் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. புதிய தொழில் நுட்பங்கள் தொழில் முனைவுகளை ஊக்குவிக்க அரசு பல திட்டங்களை கொண்டுள்ளது.

புதிய தொழில் தொடங்குவதற்கு உத்வேகத்தை ஹேக்கத்தான் வழங்கும் என நம்புகிறேன். இந்தியாவின் புதுமைக் கண்டுபிடிப்புகள் வறுமையை ஒழிக்க உதவுபவையாக இருக்கும்.

ஹேக்கத்தான் மூலம் புதிய கேமராவை கண்டு பிடித்துள்ளனர். இதன் மூலம் கூட்டத்தில் யார்- யார் பேச்சை கவனிக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியும். இதனை நான் பாராளுமன்றத்தில் பொருத்தலாம் என சபாநாயகரிடம் வலியுறுத்துவேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

பகிரவும்...