Main Menu

அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: ரபேல் நடால்- பியான்கா ஆண்ட்ரெஸ்கு சம்பியன்!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, டென்னிஸ் உலகின் உயரிய அந்தஸ்து பெற்றதும், ஆண்டின் இறுதி ‘கிராண்ட்ஸ்லாம்’ டென்னிஸ் தொடருமான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது.

139ஆவது அத்தியாயமாக நடைபெற்ற இத்தொடரில், உலகிலுள்ள பல முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடினத் தரையில் நடைபெற்ற இத்தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ரபேல் நடாலும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இளம் வீராங்கனை பியான்கா ஆண்ட்ரெஸ்குவும் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

இதில் முதலாவதாக ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியின் முடிவினை பார்க்கலாம்…

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ்வை எதிர்கொண்டார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 7-5 என நடால், போராடி கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் அதே ஆக்ரோஷத்தை தொடர்ந்த நடால், 6-3 என செட்டைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டில், சுதாகரித்துக் கொண்ட மெட்வேடவ், 7-5 என செட்டை போராடி கைப்பற்றி, நடாலுக்கு பதிலடி கொடுத்தார்.

இதனையடுத்து நடைபெற்ற நான்காவது செட்லும் ஆக்ரோஷமாக விளையாடிய மெட்வேடவ், செட்டை 6-4 என கைப்பற்றினார்.

இருவரும் தலா இரண்டு செட்டுகளை கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட், இரசிகர்களின் மனதில் பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.

இதில் இருவரும் ஆக்ரோஷமாக விளையாடினர். இதில் தனது அனுபவத்தை கொண்டு சிறப்பாக விளையாடிய நடால், செட்டை 6-4 என கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.

33 வயதான நடாலுக்கு இது நான்காவது அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டமாகும். இதற்கு முன்னதாக நடால், 2010ஆம், 2013ஆம், 2017ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அத்தோடு, ஒட்டுமொத்தமாக, 12 பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் சம்பியன், 2 விம்பிள்டன் சம்பியன், 1 அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் சம்பியன், நான்கு அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் என மொத்தமாக நடால், 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
……….
பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியின் முடிவு

பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், கனடாவின் இளம் வீராங்கனை பியான்கா ஆண்ட்ரெஸ்குவும், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்சும் பலப்பரீட்சை நடத்தினர்.

இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பபை பரிசளித்த இப்போட்டியில், முதல் செட்டை 6-3 என பியான்கா ஆண்ட்ரெஸ்கு, எளிதாக கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆக்ரோஷமாக விளையாடிய செரீனா, பியான்கா ஆண்ட்ரெஸ்குவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.

எனினும், அந்த நெருக்கடிளை சிறப்பாக சமாளித்த பியான்கா ஆண்ட்ரெஸ்கு, போராடி 7-5 என செட்டைக் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.

கனடாவின் 19 வயது வீராங்கனையான பியான்கா ஆண்ட்ரெஸ்குவின் முதல் கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டம் இதுவாகும்.

அண்மையில் நடைபெற்ற ரொஞர்ஸ் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ்சை வீழ்த்தி, 50 ஆண்டுக்கால வரலாற்றில் முதல் முறையாக சம்பியன் பட்டம் வென்ற கனேடிய வீராங்கனை என்ற பெயரை முத்திரை பதித்தார்.

தற்போது, கனடாவிற்கு முதல் கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டத்தை வென்றுக் கொடுத்து, வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.

கடந்த முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய செரீனா, ஜப்பானின் நவோமி ஒசாகாவிடம், சம்பியன் கிண்ணத்தை பறிகொடுத்திருந்தார்.

23 முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியன் கிண்ணத்தை வென்ற செரீனா வில்லியம்ஸிற்கு, அதிக கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்ற அவுஸ்ரேலியாவின் மார்க்ரட் கோர்ட்டின் 24 கிராண்ட்ஸ்லாம் என்ற சாதனையை சமப்படுத்துவது என்பது எட்டாக் கனியாக இருந்து வருகின்றது.

இதேபோல குறிப்பாக அண்மையில் கனடாவில் நடைபெற்று முடிந்த ரொஞ்ர்ஸ் கிண்ண தொடரிலும், ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்த ஜோடிகளே இறுதிப் போட்டிக்கு முன்னேறி, சம்பியன் கிண்ணத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...