Main Menu

நவாஸ் ஷெரீப்புக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு மிரட்டல் காணொளி

ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் (வயது 68), வெளிநாடுகளில் சட்ட விரோதமாக சொத்துகள் வாங்கிய பிரபலங்கள் தொடர்பான ‘பனாமா ஆவண கசிவு’ வழக்கில் சிக்கினார். இதில் அவர் குற்றவாளி என அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து, அவரது பதவியை பறித்தது.

அதைத் தொடர்ந்து அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் 3 ஊழல் வழக்குகளை பாகிஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர். அதில் ஒரு வழக்கு, அல்-அஜிசியா உருக்காலை ஊழல் வழக்கு.

இந்த வழக்கில், நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதால், அவரை குற்றவாளி என கருதி 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து இஸ்லாமாபாத் பொறுப்புடைமை கோர்ட்டு (ஊழல் தடுப்பு கோர்ட்டு ) நீதிபதி முகமது அர்ஷாத் மாலிக் கடந்த வருடம் தீர்ப்பு அளித்தார். அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப், லாகூர் காட்லக்பத் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில் லாகூரில் நவாஸ் ஷெரீப்பின் மகள் நேற்று முன்தினம் அவசரமாக கூட்டப்பட்ட பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவருடன் அவரது சித்தப்பாவும், பாகிஸ் தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவருமான ஷாபாஸ் ஷெரீப்பும் உடன் இருந்தார்.
அப்போது மரியம் நவாஸ் கூறியதாவது:-

அல்-அஜிசியா உருக்காலை ஊழல் வழக்கில் எனது தந்தை நவாஸ் ஷெரீப் குற்றவாளி என அறிவித்து 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தவர் இஸ்லாமாபாத் பொறுப்புடைமை கோர்ட்டு நீதிபதி முகமது அர்ஷாத் மாலிக் ஆவார்.

எனது தந்தைக்கு தண்டனை தீர்ப்பு வழங்க வேண்டும் என்று மறைமுக சக்திகளிடம் இருந்து மிகப்பெருமளவில் நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் அந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குற்ற மனப்பான்மை காரணமாக எங்கள் கட்சியை சேர்ந்த நாசிர் பட்டை தனது வீட்டுக்கு அழைத்து அந்த நீதிபதி பேசி இருக்கிறார்.

இந்த வழக்கில் எனது தந்தைக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்காவிட்டால், நீதிபதியின் தனிப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

எனது தந்தை நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக பண மோசடி, கமிஷன் அல்லது பிற தவறான பண பரிமாற்றத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை என நீதிபதி இப்போது கூறி உள்ளார். ஆனாலும் எனது தந்தையை சிறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது நீதிபதிக்கு உத்தரவு. இப்போது நீதிபதி மனம் வருந்துகிறார்.

நீதிபதி எனது தந்தைக்கு தண்டனை விதிக்க விரும்பவில்லை. அவர் தண்டனை விதிக்க வைக்கப்பட்டார். அதில் இருந்து அந்த நீதிபதி பல முறை தற்கொலை செய்து கொண்டு விடலாமா என்று சிந்தித்து இருக்கிறார். எனது தந்தைக்கு இந்த வழக்கில் நீதி கிடைக்காமல் போனது. இப்போது இதை இறைவனின் உதவியாக கருதுகிறோம்.

எனது தந்தைக்கு தண்டனை தீர்ப்பு அளித்தவிதம் பற்றிய நீதிபதியின் கூற்று அடங்கிய வீடியோ வெளியாகி உள்ள நிலையில் எனது தந்தை இன்னும் சிறையில் தொடரக்கூடாது. அவர் ஜாமீனில் வெளியாக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இந்த வீடியோவை பயன்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீதிபதி முகமது அர்ஷாத் மாலிக், நாசிர் பட்டுடன் பேசியதாக கூறப்படும் வீடியோவை மரியம் நிருபர்களுக்கு திரை வைத்து வெளியிட்டு காட்டினார். இது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இம்ரான்கான் அரசு இந்த வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒன்று என்று கூறுகிறது. இதை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்றும், இது நீதித்துறையின் மீதான தாக்குதல் என்றும் இம்ரான்கான் அரசு மேலும் கூறுகிறது.

பகிரவும்...