ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகளும் விடுவிப்பு

ஹமாஸ் அமைப்பினரால் 13 இஸ்ரேலிய பணயக்கைதிகளை உள்ளடக்கிய இரண்டாவது குழு மத்திய காஸாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ஏழு இஸ்ரேலிய பணயக்கைதிகளை கொண்ட முதலாவது குழுவை முன்னதாக ஹமாஸ் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ள நிலையில் தற்போது அடுத்த குழுவையும் ஒப்படைத்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேல் தடுத்துவைத்துள்ள 1,900க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளுக்கு பதிலாக மொத்தமாக 20 உயிருடன் உள்ள பணயக்கைதிகள் பரிமாறிக்கொள்ளப்படுவார்கள் என்று ஹமாஸ் தெரிவித்திருந்த நிலையில் இன்று இரண்டு குழுக்களாக 20 பணயக்கைதிகளை ஹமாஸ் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.
இதேவேளை பணயக்கைதிகளின் குடும்பத்தினரும் நண்பர்களும் மகிழ்ச்சி வெளியிட்டுவருகின்றனர்.
எதிர்வரும் நாட்களில் காசாவில் பணயக் கைதிகள் விடுதலை, பாலஸ்தீன கைதிகள் விடுதலை மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிண்ணனியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிராந்திய அமைதி உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று எகிப்துக்கு செல்வதற்கு முன்னதாக இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார்.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோர் ஷர்ம் எல்-ஷேக்கில் இன்று நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டுக்கு தலைமை தாங்கவுள்ளனர்.
இந்த மாநாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
“காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் புதிய சகாப்தத்தை உருவாக்குதல்” ஆகியன இந்த மாநாட்டின் நோக்கமாக கருதப்படுகின்றன.
பகிரவும்...