வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன் படிக்கைகளை நடைமுறைப் படுத்துவதற்கான தீர்மானம் குறித்து விவாதிக்க பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்

வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானத்தை ஜூலை 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலும், பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்களின் பங்கேற்புடனும் (28) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஜூலை 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், பி.ப 5.00 மணிவரை விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி அன்றையதினம் விசேட உரையொன்றை நிகழ்த்தவிருப்பதாகவும் பிரதிச் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
ஜூலை 3ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இரண்டாவது நாளாகவும் விவாதத்தை நடத்த இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணிக்கு தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இந்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் இலங்கை அரசாங்கமும், உத்தியோகபூர்வ கடன் வழங்குனர் குழுவும் (OCC) கடந்த 2024.06.26ஆம் திகதி கைச்சாத்திட்ட இறுதி உடன்படிக்கை, இலங்கை அரசாங்கம் மற்றும் சீன ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (EXIM Bank) ஆகியவற்றுக்கிடையில் 2024.06.26 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இறுதி உடனப்டிக்கை ஆகியவற்றை நடைமுறைப்படுது்துவதற்குத் தேவையான அனுமதியை, நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருக்கு வழங்குவதற்காக இந்தத் தீர்மானம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.
பகிரவும்...