Main Menu

ராகுல் காந்தியே தலைவராக நீடிப்பார் – காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் காங்கிரஸ் குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்தார். இந்நிலையில் அதனை ஏற்கமறுத்த காங்கிரஸ் குழு அவரே தொடர்ந்தும் பதவியில் நீடிப்பார் என தீர்மானித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இந்த முறை 52 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதிகளை கூட பெற முடியவில்லை. 5 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ், அந்த மாநிலங்களிலும் வெற்றியை தக்கவைக்க முடியவில்லை.

அப்போது, ராகுல் காந்தி, தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும், செயற்பாட்டு குழு இதனை ஏற்க மறுத்ததாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையே காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் தோல்வி, எதிர்கால திட்டங்கள் மற்றும் கட்சி வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என்றும், கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை ராகுலுக்கு வழங்குவது என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் ராகுல் காந்தியுடன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பகிரவும்...