மூன்றில் இரண்டு பெரும் பான்மைக்காக அரசாங்கம் எவ்வாறு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தப் போகிறது? – ஐக்கிய மக்கள் சக்தி

மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கியமைக்கு அரசாங்கம் எவ்வாறு நன்றிக்கடனை செலுத்தும் என்பதை எதிர்வரும் சில தினங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவு திட்டத்தின் ஊடாக தெரிய வரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தின் மங்கள வரவு – செலவு திட்டம் சில தினங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதேநேரம் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தமைக்கு அரசாங்கம் எவ்வாறு நன்றிக்கடனை செலுத்தும் என்று அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று சிலர் இன்றும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்துக்கு இன்னும் இனங்காண முடியாமலிருக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம் ஆட்சியைப் பொறுப்பேற்று மூன்றே மாதங்களில் அரிசி விலைக்கு ஏற்பட்ட நிலைமையும், அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டமையுமாகும்.
காலநிலை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட விசாயிகளுக்கான இழப்பீடு மற்றும் உர மானியத்தைக் கூட இந்த அரசாங்கத்தால் வழங்க முடியாதுள்ளது. அரிசி மற்றும் துறைமுகத்தில் கொள்கலன்கள் தொடர்பான பிரச்சினை குறித்து ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார். ஆனால் இன்று வரை அதற்கு தீர்வு கிட்டவில்லை. வாகனங்களில் மேலதிக பாகங்களை அகற்றுவதைத் தவிர அரசாங்கம் மக்களுக்காக எந்த வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுக நகரம் தொடர்பில் கடுமையாக விமர்சித்தவர்கள் இன்று கண்களை மூடிக் கொண்டு அவற்றுக்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். சர்வதேசத்துடனான பிரச்சினைகளுக்கு மாத்திரமின்றி உள்நாட்டு பிரச்சினைகளுக்கு கூட இந்த அரசாங்கத்தினால் தீர்வு காண முடியாது போயுள்ளது என்றார்.
பகிரவும்...