Main Menu

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய , சுமார் இரண்டரை மணித்தியாலங்-கள் வாக்குமூலம்

இலஞ்ச ஊழல் ஒழப்பு ஆணைக்குழுவினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசேட விசாரணை ஒன்றில், வாக்குமூலத்தை பெறுவதற்காகவே கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் அரச உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட சுயாதீன நிறுவனமாக இலஞ்சம் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு பல வழக்குகளை விசாரணை
செய்து வருகின்றது. அந்த வகையில், இடம்பெறுகின்ற விசாரணை தொடர்பான மேலதிக தகவல்களைச் சேகரிக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில், கொழும்புக்கு அருகிலுள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில் பல வீடுகளைச் சட்டவிரோதமான முறையில் சிலருக்கு வழங்குவதற்குப் பரிந்துரை கடிதங்களை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர், கடந்த 12ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அந்தத் திகதியில் சிங்கப்பூருக்கான பயணமொன்றை மேற்கொண்டிருந்த காரணத்தினால், தம்மால் சமூகமளிக்க முடியாது என ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆணைக்குழு, விசாரணைக்கான இன்றையதினத்தினை ஒதுக்கியிருந்தது.
குறித்த வீடமைப்புத் திட்டம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பரிந்துரை கடிதங்கள் தொடர்பில் தெளிவான வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே ஆணைக்குழு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சின் உயர் பதவியில் இருந்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த முறைகேடு தொடர்பான விசாரணைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.