Main Menu

மாவீரர் தின நிகழ்வுகள் – உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்

மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்ட சந்தேக நபர் ஒருவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சமூக செயற்பாட்டாளரான குறித்த நபர் தமது பேஸ்புக் கணக்கின் ஊடாக மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் போலி பிரசாரம் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதன்படி, இன்று (01) அதிகாலை பொரலஸ்கமுவ பகுதியில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதான குறித்த சந்தேகநபர் கொழும்பு நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
இதன்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறிலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், மாவீரர் தின நிகழ்வுகளை ஊக்குவித்த குற்றச்சாட்டில் கைதான மற்றுமொரு சந்தேக நபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் யாழ்ப்பாண உப பிரிவினரால் இணுவில் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராகப் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள ஏனைய இருவர்களில் ஒருவர் பத்தேகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்தாலும், பதாகைகள், சின்னங்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி உயிரிழந்த உறுப்பினர்களை நினைவுகூருவதில் தடையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கருத்து வெளியிட்டதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டன.
இவ்வாறு பரப்பட்ட உண்மைக்குப் புறம்பான பிரசாரம் தொடர்பில் காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பகிரவும்...