Main Menu

புதிய நாடாளுமன்றில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார் ஜனாதிபதி!

எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கவுள்ளார்.

இந்நிலையில், குறித்த தினத்தில் பிற்பகல் 3 மணிக்கு முதலாவது அமர்வை ஜனாதிபதி ஆரம்பித்துவைக்கவுள்ளதுடன் புதிய அரசாங்கத்தின் கொள்கைக் பிரகடன உரையை அவர் நிகழ்த்தவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பணிப்பாளர் ஷான் விஜயதுங்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 33 (2) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய அவர் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.

அன்றையதினம் காலை 9.30 மணிக்கு புதிய நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவிருப்பதுடன் முதலில் சபாநாயகர் தெரிவு, அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிச் சத்தியப்பிரமாணம் என்பன இடம்பெறவுள்ளது.

இதன்பின்னர் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் தெரிவுசெய்யப்படுவர்.

அத்துடன், நாடாளுமன்ற அமர்வை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்க ஜனாதிபதி வருகைதரும்போது சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க ஆகியோர் நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் அவரை வரவேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதியின் கொடி ஏற்றிவைக்கப்படுவதுடன், படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கலசேவிதர் மற்றும் உதவி படைக்கலசேவிதர், சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரால் ஜனாதிபதி சபைக்குள் அழைத்துச் செல்லப்படுவதுடன், அக்கிராசனத்தில் அமரும் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்துவார் என இலங்கை நாடாளுமன்ற தொடர்பாடல் பணிப்பாளர் ஷான் விஜயதுங்க தெரிவித்துள்ளார்.

பகிரவும்...