Main Menu

தி.மு.க. அமைச்சர்கள் ஊழல் பட்டியல் ஏப்ரல் 14-ந்தேதி வெளியிடப்படும்- அண்ணாமலை பரபரப்பு பேட்டி

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பா.ஜனதா கட்சியை 420 கட்சி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருக்கிறாரே? என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அண்ணாமலை கூறியதாவது: உதயநிதி ஸ்டாலினை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அவரடு தகுதி என்ன? படிப்பு என்ன? அவர் எங்கு போய் என்ன கஷ்டப்பட்டார்? அவர் யாரிடம் போய் என்ன பேசினார். மக்கள் அவரது திறமைக்கு ஓட்டு போட்டார்களா? சேப்பாக்கம் தொகுதி என்பது தொடர்ந்து தி.மு.க. வெற்றி பெறும் தொகுதி. யாரை நிறுத்தினாலும் தி.மு.க. வெற்றி பெறக்கூடிய தொகுதி அது. இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் ‘நீட்’ பற்றி பேசுகிறார். அவருக்கு நீட் பார் முலாவை சரி செய்யத் தெரியுமா? கேட்டால் அண்ணா பல்கலைக்கழக செனட் மெம்பர் என்கிறார். தமிழகத்தில் ஒரு காலத்தில் வல்லுனர்கள் கருத்து சொல்லும் நிலை இருந்தது. ஆனால் இன்று கருத்து கந்தசாமிகளாக உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் பேசுகிறார்கள். பி.ஜே.பி.யை 420 கட்சி என்கிறார். நான் திரும்ப பதில் சொன்னால் அது வேற மாதிரி ஆகிவிடும். அது நன்றாக இருக்காது. முதலில் யார் 420 என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். நான் சொன்ன மாதிரி ஏப்ரல் 14-ந்தேதி தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். வாட்ச் பில்லில் இருந்து எல்லாம் எனக்கு வரும். நான் சொன்ன கணக்கு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் சொல்லி உள்ளேன். ஒவ்வொரு அமைச்சர் பெயரிலும் சொத்து எங்கெங்கு உள்ளது என்ற பட்டியல் விவரமாக வெளியிடப்படும். நீங்கள் ரொம்ப ஆச்சரியப்படுவீர்கள். அவர்களது முதலீடு பிசினஸ், மால், துபாயில் இன்ப்ரா அனைத்தும் அதில் தெரியவரும். எனவே ஏப்ரல் 14 அன்று என் வாட்ச் பில்லோடு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் தி.மு.க. அமைச்சர்களின் சொத்து பட்டியல் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும். இந்த சொத்து பட்டியல் முழுவதும் இணைய தளத்தில் வெளியிடுவோம். அதன் நகல் பென்டிரைவ் டிவில் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படும். எனது 10 ஆண்டு வங்கி கணக்கு உள்பட நான் சொன்ன அனைத்தும் அதில் வரப் போகிறது. அதை பார்த்ததற்கு அப்புறம் 420 யார் என்று தெரியும். அன்றைக்கு நீங்கள் கேள்வி கேளுங்கள் 420 யார் என்று பேசிக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...