Main Menu

தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆதாரத்துடன் விளக்கம் அளிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டி விட்டு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்திருந்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அறிவித்த எடப்பாடி பழனிசாமி அணியினர் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று ஓ.பன்னீர் செல்வத்தை அழைக்காமல் எடப்பாடி பழனிசாமி தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்துக்கு பின் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளம் என்று குற்றம் சாட்டினார். இதனால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நாளுக்கு நாள் வலுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி அணியினர் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக நான் செயல்பட்டு வரும் நிலையில் எனது ஒப்புதலின்றி வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அளித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக அ.தி.மு.க.வில் சட்ட விதி மீறல்கள் தொடர்ந்து நடைபெற்றுள்ளன என்றும் தனது கடிதத்தில் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் சட்ட நடவடிக்கைகள் அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளன.

இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி அணியினர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க.வில் தற்போது ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு போதுமான ஆதரவு இல்லை என்றும், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட கட்சியின் நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி பக்கமே உள்ளனர் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு விரிவான விளக்கத்துடன் பதில் அளிக்க உள்ளனர். அ.தி.மு.க. சட்ட விதிகளின் படியே நாங்கள் நடந்து கொண்டுள்ளோம். இதில் எந்த விதி மீறலும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தங்களது பதில் கடிதத்தில் தெரிவிக்க உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு வக்கீலும் சட்ட நிபுணர்களும் மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வக்கீல் ஒருவர் கூறும் போது, அ.தி.மு.க.வை பொறுத்த வரை பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே கட்சியின் தலைமையை தீர்மானிக்கும். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு உறுப்பினர்களின் முழு ஆதரவு உள்ளது. இதனை தேர்தல் ஆணையத்தில் நிரூபிப்போம் என்று கூறினார். இன்னும் சில தினங்களில் இந்த பதில் கடிதம் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையும், பின்னர் அவரை நீக்கியதையும் முன்னுதாரணமாக குறிப்பிட்டும் இந்த பதில் மனுவில் பல்வேறு தகவல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி ஆதரவு வக்கீல் அணியினர் இந்த பதில் கடிதத்தை தயார் செய்யும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளனர். 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு முன்னதாகவே இந்த பதில் மனுவை எடப்பாடி அணியினர் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். கட்சியின் சட்ட விதிகளை மாற்றம் செய்வதற்கு பொதுக்குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று அந்த பதில் மனுவில் குறிப்பிட்டு உள்ளனர். பல்வேறு கட்சிகளில் இதற்கு முன்னர் நடைபெற்றுள்ள இது போன்ற சம்பவங்களை எடுத்துகாட்டாக குறிப்பிட்டும் இந்த பதில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வக்கீலான திருமாறன் கூறும் போது, அ.தி.மு.க.வில் தற்போது ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் ஒப்புதல் இன்றி நடை பெறும் நிகழ்ச்சிகள் செல்லாது என்றும், இதன் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையத்தில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளோம் என்றும் கூறினார். எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் வலுத்து வரும் நிலையில் வருகிற 11-ந்தேதி திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? என்கிற கேள்வியும் பூதாகரமாக எழுந்துள்ளது.

பகிரவும்...