தமிழரசுக் கட்சியில் இளைஞர், பெண்கள் இணைய வேண்டும் – பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு

“பொதுத் தேர்தலில் நாம் பெற்ற பின்னடைவிலிருந்து மீண்டு எழுவதற்கான சந்தர்ப்பமாக உள்ளூராட்சிமன்றத் தோ்தல்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் இடைக்கால பதில் தலைவா் சி.வி.கே.சிவஞானம், “இளைஞா்கள், பெண்கள் கூடுமானவரையில் எமது கட்சியில் இணைந்துகொள்ள வேண்டும். அதிலிருந்து பொருத்தமானவா்களை நாம் வேட்பாளா்களாகத் தெரிவு செய்வோம்” என்றும் தெரிவித்தாா்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) ஊடகவியலாளா்களை சந்தித்த போதே சி.வி.கே.சிவஞானம் இதனைத் தெரிவித்தாா்.
கடந்த சனிக்கிழமை வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பதில் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னா் நேற்று முதல் தடவையாக ஊடகவியலாளா்களைச் சந்தித்து, கட்சியின் புதுவருடத்துக்கான உத்தேச செயற்பாடுகளை அவா் விளக்கினாா்.
இதன்போது சி.வி.கே.சிவஞானம் தெரிவித்ததாவது,
“இரண்டு தோ்தல்கள் புதிய வருடத்தில் நடைபெறவிருக்கின்றது. உள்ளூராட்சி மன்றத் தோ்தல்களும், மாகாண சபைகளுக்கான தோ்தல்களும் புதிய வருடத்தில் நடைபெறும்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னா் வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்தது. ஆனால், தோ்தல் நடைபெறவில்லை.
அந்த வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படுமாயின், புதிய வேட்பாளா்களைத் தெரிவு செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.
இந்தத் தோ்தலப் பொறுத்தவரையில் வேட்பாளா் நியமனத்தில் 25 வீதமானவை பெண்களுக்கும், 25 வீதம் இளைஞா்களுக்கும் வழங்க வேண்டும்.
ஆனால், இதற்குத் தேவையானவா்கள் எம்மிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், பொருத்தமானவா்கள் உள்ளூராட்சி மன்றத் தோ்தலில் எமது கட்சியுடன் இணைந்து போட்டியிட முன்வரவேண்டும்.
தோ்தலில் போட்டியிட விரும்புபவா்கள் கட்சியின் தொகுதிக் கிளைகள் மூலமாகவோ அல்லது மூலக் கிளை மூலமாகவோ இணைந்துகொள்ள முடியும்.
அவ்வாறான நிலையில் கட்சி ஒரு நல்ல முடிவை எடுக்கும். பொருத்தமானவா்களைத் தெரிவு செய்யும்.
வடக்கு – கிழக்கு பகுதிகளில் கட்டமைப்புக்களைக் கொண்டியங்குவதும், தமிழ்ப் பகுதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பாராளுமன்ற உறுப்பினா்களைக் கொண்ருப்பதுமான ஒரே கட்சி தமிழரசுக் கட்சிதான். அத்துடன் உள்ளூராட்சி மன்ற நிா்வாகத்தில் அனுபவம் உள்ள பலரும் எம்முடன் இருக்கின்றாா்கள்.
பொதுத் தோ்தலில் நாம் பெற்ற பின்னடைவிலிருந்து மீண்டெழுவதற்கான ஒரு சந்தா்ப்பமாக இந்த உள்ளூராட்சிமன்றத் தோ்தல்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய முதலாவது கடமையாக இருக்கின்றது.
அதனால் இளைஞா்கள், பெண்கள் கூடுமானவரையில் எமது கட்சியில் இணைந்துகொள்ள வேண்டும். இவா்களில் பொருத்தமானவா்களை வேட்பாளா்களாக்க போட்டியிடுவதற்கு நாம் வாய்ப்பளிப்போம்.
பாதுகாப்பும் காணி விடுவிப்பும்
இப்போது தென்பகுதியில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு குறைக்கப்படுகின்றது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்ற நிலையில் அது குறைக்கப்படுவதாக அரசாங்கத்தின் சாா்பில் சொல்லப்படுகின்றது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் இங்கு இல்லையென்றால் எதற்காக எங்களுடைய பகுதிகளில் எங்களுடைய நிலத்தை இராணுவம், கடற்படை, விமானப்படை என்பன ஆக்கிரமித்திருக்கின்றன? இதனால் எமது மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.
குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் விமானப்படை அந்த மாவட்டத்தின் சுமாா் மூன்றில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது.
இதனால், எமது மக்கள் விவசாயத்தை மேற்கொண்டு, தமது வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு பறிக்கப்படுகிறது.
எனவே அரசாங்கம் இவற்றைக் கருத்திற்கொண்டு இந்த முப்படையினரும் ஆக்கிரமித்துள்ள நிலங்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் கட்சி ரீதியாக முன்வைக்கிறேன்.
கட்சிக்குள் உருவாகியிருக்கும் பிரச்சினைகளை நாம் தீா்த்துவைத்து கட்டுக்கோப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்திருக்கிறோம்.
அண்மைக்காலத் தெரிவுகளுக்குப் பின்னா் பல விமா்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அதனையிட்டு நான் அக்கறைப்படுவதில்லை. இப்போது பவளவிழாவைக் கொண்டாட இருக்கிறோம்.
மட்டக்களப்பில் பிரதான நிகழ்வு இடம்பெறும். மாவட்ட ரீதியாகவும் நிகழ்வுகள் இடம்பெறும். இதன்போது, இளைஞா்கள் யுவதிகள் எமது கட்சியில் இணைந்து கட்சியைப் பலப்படுத்த உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்” என்றும் சி.வி.கே.சிவஞானம் மேலும் தெரிவித்தாா்.
பகிரவும்...