Main Menu

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி எட்டாம் திகதி தடுப்பூசி ஒத்திகை

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி எட்டாம் திகதி தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படவுள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான சேமிப்புக் கிடங்குகள் போதுமானதாக உள்ளதா என்பது குறித்துச் சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து பகுப்பு ஆய்வகத்தில் சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்துகளை வைப்பதற்கு மாவட்டங்களில் 51 குளிர்சாதனக் கிடங்குகள் உள்ளதாகவும் அவற்றில் 2 கோடி முறை செலுத்தும் அளவில் மருந்துகளைச் சேமிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஏற்கெனவே 17 இலட்சம் ஊசிகள் உள்ளதாகவும் மத்திய அரசு 33 இலட்சம் ஊசிகளை முதற்கட்டமாக வழங்கியுள்ளதாகவும் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தடுப்பூசிகள் எப்போது வந்தாலும் அதை அடுத்த நாள் முதலே செலுத்த தயார் நிலையில் உள்ளதாகவும் 2,850 இடங்களில் நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

6 இலட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் முதற்கட்டமாகத் தடுப்பூசிகள் போடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

18 வயதுக்கு மேற்பட்டோருக்குக் குறிப்பாக முதியோருக்கு முன்னுரிமை வழங்கியே தடுப்பூசிகள் போடப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி போடுவது தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பகிரவும்...