ஜனாதிபதிக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் அதன் குறிக்கோள் குறித்தும், பொருளாதார அபிவிருத்திக்காக அரச மற்றும் தனியார் துறைகள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பது குறித்தும் வர்த்தக சமூகத்திற்கு அவசியமான வசதிகளை வழங்குதல் பற்றியும் இங்கு விளக்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலக்கு மயப்பட்டதும், அந்த இலக்குகளை அடைய கொள்கைகளை சீரமைப்பதன் மூலமும், இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குதல், சமூக நல்வாழ்வு மற்றும் சுற்றாடல் நிலைபேற்றுத்தன்மையை போசித்தல் ஆகியவற்றின் ஊடாக நாட்டை வளமான எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்வதற்கு பங்களிக்குமாறும் தெரிவித்தார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகள் சபை, இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பு மற்றும் அது பற்றிய நோக்கு, எதிர்கால வேலைத்திட்டங்கள் மற்றும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திர, உப தலைவர் பிங்குமால் தெவரதந்திரி, பிரதி உப தலைவர் வினோத் ஹைதிராமணி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பகிரவும்...