Main Menu

சீனா-தமிழகம் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம்: மோடி பெருமிதம்

சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம் இருந்ததாக இன்று நடைபெற்ற சந்திப்பின்போது மோடி கூறினார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் – இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முறைசாரா சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. நேற்று மாலை 5 மணிக்கு அர்ஜுனன் தபசு பகுதிக்கு வந்த சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் உரையாடியபடி அங்குள்ள சுற்றுலாப் பகுதிகளை பார்த்து ரசித்தனர். கலைநிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர்.

பின்னர் இரவு 7.30 மணி அளவில் அங்கேயே சீன அதிபர் ஜின்பிங்குக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இன்று காலை பிரதமர் மோடி தங்கி இருக்கும் தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலில் மீண்டும் இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். கண்ணாடி அறையில் அமர்ந்து, கடலையும் இயற்கையையும் ரசித்தபடி இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். 

இந்த ஆலோசனையின்போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர். ஆலோசனைக்குப் பிறகு வெளியே வந்த இருவரும் கடற்கரையை ரசித்தனர்.

சீன அதிபர் மற்றும் அவரது குழுவினர்

அதன்பின்னர் மோடி, ஜி ஜின்பிங் தலைமையில் இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சீன வெளியுறவு மந்திரி வாங் யி, இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது சீன அதிபரை வரவேற்று பேசிய மோடி, மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன் என தமிழில் பேசினார். உலகின் மிகவும் தொன்மையான மொழியான தமிழில் நான் பேசுகிறேன் என்றார்.

இந்தியாவும் சீனாவும் பொருளாதார சக்திகளாக இருக்கின்றன என்றும், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே ஆழமான கலாச்சாரம் மற்றும் வணிக உறவு இருந்தது என்றும் மோடி கூறினார்.

பகிரவும்...