சதிகாரர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவர்: பிரதமர் மோடி உறுதி
டெல்லியில் நடந்த கொடிய கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.
இரண்டு நாள் அரசு பயணமாக பூட்டானுக்கு சென்றுள்ளார் பிரதமர் மோடி.
திம்புவில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.
“இன்று, நான் மிகவும் கனத்த இதயத்துடன் இங்கு வந்துள்ளேன். நேற்று மாலை டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன். இன்று முழு தேசமும் அவர்களுடன் நிற்கிறது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அனைத்து நிறுவனங்களுடனும் நான் நேற்று இரவு முழுவதும் தொடர்பில் இருந்தேன். எங்கள் விசாரணை அமைப்புகள் இந்த சதித்திட்டத்தின் காரணத்தை கண்டுபிடிக்கும். இதற்குப் பின்னால் உள்ள சதிகாரர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள். இந்த கொடிய சம்பவத்துக்கு பின்னால் உள்ள அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அதேவேளை, நாட்டின் முன்னணி புலனாய்வு அமைப்புகள் டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் விரைவான மற்றும் முழுமையான விசாரணையை நடத்தி வருவதாகவும், இச்சம்பவத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...