Main Menu

கொரோனா வதந்தி: ஹீலர் பாஸ்கர் கைது

கொரோனாவுக்கு இயற்கை மருத்துவம் சொல்வதாக கூறி மக்களை குழப்பும் வகையில் வதந்தி பரப்பி வந்த ஹீலர் பாஸ்கர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சின்னகவுண்டர் படத்தில் வரும் நகைச்சுவை நடிகர் செந்தில் போல, ஏட்டிக்கு போட்டி பேசிக்கொண்டு மரபு வழி மருத்துவர் என ஊருக்குள் சுற்றி வந்தவர் ஹீலர் பாஸ்கர்..!

கொரோனா வைரஸ் தொற்று குறித்து மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை, இலுமினாட்டிகளின் நடவடிக்கை என்றும் மக்களை சிகிச்சைக்கு அழைத்துச் சென்று கொலை செய்ய போகிறார்கள் என்றும் மக்களை அச்சுருத்தும் வகையில் வதந்தியை பரப்பி விட்ட மகாபிரபு ஹீலர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோவை சுகாதாரதுறை இணை இயக்குனர் ரமேஷ்குமார் புகார் அளித்தார்.

இதையடுத்து யூடியூப்பில் கொரோனாவுக்கு மட்டும் அல்ல அனைத்து வைரஸ்களுக்கும் மருத்துவம் சொல்லி வாயால் வடை சுட்டுக் கொண்டிருந்த மருத்துவ மகான் ஹீலர் பாஸ்கரை கோவை குனியமுத்தூரில் சுற்றி வளைத்த காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

எந்த ஒரு முறையான மருத்துவ படிப்பும் பயிலாமல் , நான்கு இயற்கை மருத்துவம் தொடர்பான புத்தகத்தை படித்து மனப்பாடம் செய்து கொண்டு, ஊருக்கே மருத்துவம் சொல்லி வந்ததாக குற்றச்சாட்டிற்கு ஆளாகி இருக்கும் ஹீலர் பாஸ்கர் ஏற்கனவே இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து சில பெண்கள் பலியானதால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.

எளிய முறை என்று இவர்களை போன்ற போலிகளின் பேச்சை கேட்டால் சமூக அமைதி மட்டுமல்ல தனிமனிதர்களின் நிம்மதியும் கெட்டுப்போகும் என்கின்றனர் காவல்துறையினர்..!

பகிரவும்...