Main Menu

கால்பந்து உலகக்கிண்ண தொடரில் நான்காவது முறையாக மகுடம் சூடியது அமெரிக்கா!

பெண்களுக்கான கால்பந்து உலகக்கிண்ண தொடரில், நான்காவது முறையாக அமெரிக்கா அணி உலகக்கிண்ணத்தை வென்றுள்ளது.

எதிர்பார்ப்பு மிக்க இறுதிப் போட்டியில், நடப்பு சம்பியன் என்ற அந்தஸ்த்துடன் களமிறங்கிய அமெரிக்கா அணி, முதல் முறையாக உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது.

இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்த இப்போட்டியில், இரண்டு அணிகளுமே ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடின.

இந்த ஆக்ரோஷம் முற்பாதியில் உச்சக் கட்டத்தை தொட்ட போதும், முற்பாதியில் இரண்டு அணிகளால் முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் பரபரப்பாக நகர்ந்த முற்பாதி, கோல் எதுவுமின்றி நிறைவுக்கு வந்தது.

இதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில், இரண்டு அணிகளும் தங்களது ஆக்ரோஷத்தை தொடர்ந்து.

இது ஒரு கட்டத்தில் அமெரிக்கா அணிக்கு சாதகமாக அமைந்தது. போட்டியின் 61ஆவது நிமிடத்தில் அமெரிக்கா அணிக்கு பெனால்டி வாய்ப் பொன்று கிடைத்தது.

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொண்ட நட்சத்திர வீராங்கனை மேகன் ராபினோ இதனை கோலாக மாற்றி, அணிக்காக முதல் கோலை பெற்றுக்கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து பதில் கோல் போடுவதற்கு நெதர்லாந்து அணி கடுமையாக போராடியது. எனினும் அதற்கு அமெரிக்கா அணி வழிவிடவில்லை.

இதனையடுத்து, போட்டியின் 69ஆவது நிமிடத்தில் அமெரிக்கா அணிக்கு இன்னொரு கோல் போடும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த கோலை அணியின் மற்றொரு வீராங்கனையான ரோசா லாவெல் அடிக்க, அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

மறுபுறம் தொடர்ந்து நெதர்லாந்து அணி, கோல் போடுவதற்கு முயற்சி செய்துக் கொண்டே இருந்தது. ஆனால் அதற்கு அமெரிக்கா அணி வாய்ப்பு கொடுக்கவே இல்லை.

அத்தோடு மேற்கொண்டு இரண்டு அணிகளாலும் கோல் அடிக்கவும் முடியவில்லை. இதனால் போட்டியின் இறுதியில் அமெரிக்கா அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று நான்காவது முறையாக மகுடம் சூடியது.

இதற்கு முன்னதாக அமெரிக்கா அணி, 1991ஆம், 1999ஆம் மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, 2011ஆம் ஆண்டு இரண்டாம் இடமும், 1995ஆம், 2003ஆம் மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த தொடரின் தங்கப் பந்து விருதினையும், தங்க பாதணி விருதினையும் அமெரிக்காவின் மேகன் ராபினோ வென்றார்.

வெள்ளி பந்து விருதினை இங்கிலாந்தின் லூஸி பிரவுண்ஸ்சும், வெண்கல பந்து விருதினை அமெரிக்காவின் ரோசா லாவெல்லும் வென்றனர்.

வெள்ளி பாதணி விருதினை அமெரிக்காவின் அலெக்ஸ் மோர்கனும், வெண்கல பாதணி விருதினை இங்கிலாந்தின் எலன் வைட்டும் வென்றனர்.

பகிரவும்...