Main Menu

உலகின் பணக்காரர் பட்டியலில் லேரி எலிசன் : எலான் மஸ்க்கை முந்தினார்

ஒரேக்கிள் (Oracle) நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன் (Larry Ellison), உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ப்ளூம்பெர்க் குறியீட்டின் படி, எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பை விட எலிசனின் நிகர மதிப்பு உயர்ந்துள்ளது.

ஒரேக்கிள் நிறுவனப் பங்குகள் 43 வீதம் வரை உயர்ந்ததன் காரணமாக, 81 வயதான எலிசனின் மொத்த நிகர மதிப்பு $393 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

எலிசன் முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து, எலான் மஸ்க் $385 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திற்குச் சரிந்துள்ளார்.

ஓரேக்கிள் நிறுவனத்தின் கிளவுட் வணிகத்தில் ஏற்பட்ட திடீர் வளர்ச்சி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதனால், ஒரேக்கிள் பங்குகள் ஒரு நாளில் $101 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்து, அதன் சந்தை மதிப்பு $947 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

லேரி எலிசன் ஒரேக்கிள் நிறுவனத்தின் 41 வீத பங்குகளை தன்வசம் வைத்துள்ளார். அவரது செல்வத்தின் பெரும்பகுதி இந்த நிறுவனத்தின் முதலீடுகளிலிருந்தே வருகிறது.

உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், எல்விஎம்ஹெச் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் போன்றோர் சில நேரங்களில் அவரை முந்தியிருந்தாலும், மஸ்க் மீண்டும் முதலிடத்திற்கு வந்திருந்தார். ஆனால், தற்போது ஒரேக்கிள் பங்குகளில் ஏற்பட்ட பெரும் ஏற்றம், எலான் மஸ்கின் ஆதிக்கத்தை முறியடித்துள்ளது.

லேரி எலிசன் யார் ?

நவீன தொழில்நுட்பத்தின் ஜாம்பவானான ஒரேக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எலிசன், நவீன தொழில்நுட்ப உலகில் முக்கியமான நபர்களில் ஒருவராவார். லோரன்ஸ் ஜோசப் எலிசன் என்பது இவரது இயற்பெயர், 1944 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பிறந்தார். சிக்காக்கோவில் பெற்றோர்களால் தத்தெடுக்கப்பட்டு வளர்ந்த இவர், பொருளாதார ரீதியாக மிகவும் சவாலான சூழலில் இருந்து பெரும் வெற்றியாளராக உருவெடுத்தவர்.

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் படித்த பின்னர், கல்வியை நிறுத்திவிட்டு மென்பொருள் துறையில் பணியாற்றத் தொடங்கினார்.

1977 இல், வெறும் $2,000 அமெரிக்க டொலர் முதலீட்டில், தனது நண்பர்களான பொப் மைனர் (Bob Miner) மற்றும் எட் ஓட்டிஸ் (Ed Oates) ஆகியோருடன் இணைந்து ஒரேக்கிள் (Oracle) என்ற மென்பொருள் நிறுவனத்தை நிறுவினார்.

ஐபிஎம் (IBM) நிறுவனத்தின் தொடர்புசார் தரவுத்தளம் (relational database) பற்றிய ஆய்வுக்கட்டுரையால் ஈர்க்கப்பட்டு, ஒரேக்கிளை உருவாக்கி, தரவுத்தள துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார்.

2014 வரை ஒரேக்கிளின் தலை நிறைவேற்று அதிகாரியாகப் (CEO) பணியாற்றிய எலிசன், தற்போது நிர்வாகத் தலைவராகவும் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் (CTO) இருந்து நிறுவனத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையை வழங்கி வருகிறார்.

தொழில் வாழ்க்கையைத் தாண்டி, எலிசன் தனது  சாதாரண வாழ்க்கையில், ஹவாய் தீவில் உள்ள லானா தீவின் பெரும்பாலான பகுதிகளை சொந்தமாக வைத்துள்ளார். படகுப் பந்தயம் மற்றும் உலகெங்கிலும் உள்ள மதிப்புமிக்க சொத்துகளில் முதலீடு செய்வதிலும் ஆர்வம் கொண்டுள்ளார்.

மனிதநேயப் பணிகளில் ஆர்வம் கொண்ட இவர், உடல்நலம், காலநிலை மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள எலிசன் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியுள்ளார்.

எலிசனின் குடும்பமும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது மகன் டேவிட் எலிசன், ஸ்கைடான்ஸை வாங்கியதைத் தொடர்ந்து பாரமவுண்ட் குளோபல் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

அவரது மகள் மேகன் எலிசன், புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளராகவும், அன்னபூர்ணா பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனராகவும் இருக்கிறார்.

பகிரவும்...
0Shares