Main Menu

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மறைக்கப்பட்ட விடயங்களை தாமதமின்றி வெளியிடுங்கள் – சமூக மற்றும் அமைதி மத்திய நிலையம்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் மறைக்கப்பட்டுள்ள விடயங்களை வெளியிடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள சமூக மற்றும் அமைதி மத்திய நிலையம், தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமூக மற்றும் அமைதி மத்திய நிலையம் ஜனாதிபதி செயலகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு சென்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தீர்க்கப்படாத பல விடயங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட கடிதங்களை நேற்றுமுன்தினம் கையளித்திருந்தது.

இதன்போது அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை ரொஹான் டி சில்வா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் துன்பியல் சம்பவம் எனவும் அதற்கு உரிய நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும்  அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.அத்துடன் அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், எமது கடிதங்களையும் அவர்களிடம் ஒப்படைக்க தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம்.அதனை முறையாகவும் விரைவாகவும் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் மற்றும் அதன் பின்னர் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் என்பவற்றை உள்ளிடக்கிய ஆவணத்தையும் வழங்கியுள்ளோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மறைக்கப்பட்டுள்ள விடயங்களை வெளியிடுமாறு அன்று தொடக்கம் இன்று வரை தொடர்ச்சியாக போராடி வருகிறோம்.தயவு செய்து இந்த தாக்குதலுடன் தொடர்புடைய இணைப்புகள் வெளியிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கிறோம்.

தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகள் பல உள்ளன.இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கிறோம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்த போது சனல் 4 காணொளி தொடர்பில் விசாரணை செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

அந்தகுக்குழுவின் அறிக்கையிலேயே காணமால் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தன. வாக்குமூலங்களும் காணாமல் போயுள்ளன.தற்போது பொறுப்பில் உள்ள ரவி செனவிரத்ன அதனை மீட்பார் என்று நாம் நம்புகிறோம் என்றார்.