Main Menu

உத்தேச வாடகை வருமானச் சட்டம் அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானது

உத்தேச வாடகை வருமானச் சட்டம் அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானது

சாதாரண வருமானம் ஈட்டுவோரிடம் இந்த வரி அறவிடப்பட மாட்டாதென ஜனாதிபதி உறுதி

சமபாலின திருமணம் குறித்த விடயம் இந்தச் சட்டத்தில் இல்லை.
பௌத்த மதப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, பெண்களின் உரிமையையும் பாதுகாக்கும் வகையில் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் – ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.
உத்தேச வாடகை வருமானச் சட்டம், அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஒவ்வொரு நபரினதும் முதல் சொத்து, இந்த வாடகை வரியிலிருந்து விடுவிக்கப்படும் அதேநேரம், சாதாரண வருமானம் ஈட்டும் மக்களிடத்தில் இந்த வரி அறவிடப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நேற்று (18) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின்போதே இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய ஜனாதிபதி, பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஆராய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்புக்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையும் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,

சபாநாயகர் பாலினச் சமத்துவ சட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சபையில் அறிவித்தார். ஆனால் இது அரசியலமைப்பின் 4 ஆவது பிரிவின் கீழான இந்த சபையின் அதிகாரங்களை மீறுவதாகும். எனவே அதுகுறித்து ஆராய தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்.

2011 முதல், பெண்கள் வலுவூட்டல் மற்றும் பாலின சமத்துவம் குறித்த தேசிய கொள்கை உள்ளது. ஐந்தாவது நிலையான அபிவிருத்தி இலக்குகளின் அடிப்படையிலும், பெண்கள் மாநாடுகள் மற்றும் நாங்கள் கையெழுத்திட்ட பல ஒப்பந்தங்களின் அடிப்படையிலும் அதற்கான பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்துள்ளது.

மேலும், மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு எதிரான கமலாவதி வழக்கில் தேசியக் கொள்கையை அமைச்சரவையின் அதிகார வரம்பிற்குள் மாத்திரம் பரிசீலித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அது பாராளுமன்றத்தின் செயற்பாடாகும். இது அரசியல் விவகாரம். இதில் உயர் நீதிமன்றம் எந்த வகையிலும் தீர்ப்பளிக்க முடியாது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அவர்கள் பாராளுமன்றத்தின் அதிகார எல்லைக்குள் நுழைவதாக அமையும்.

இரண்டாவதாக, பெண்களின் சமத்துவம் மற்றும் சமூக அந்தஸ்து சார்ந்து ஏராளமான தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நிரோஷன் அபேகோன் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு எதிரான ரத்நாயக்க தரங்க லக்மாலி வழக்கு விசாரணையில், மக்களின் கண்ணியம் மற்றும் நல்வாழ்வு அடிப்படை உரிமையாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பத்து நீதிபதிகள் கொண்ட குழுவின் முன்னிலையிலான சரத் ஜயசிங்க உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.

ஒரு அரசியலமைப்புத் திருத்தத்தின் பெறுமதியை அறிய, அதன் விளக்க உரைகளை மட்டும் நம்பியிருப்பது போதுமாதல்ல.

சமத்துவக் கொள்கையை நிர்வகிக்கும் அடிப்படைக் கோட்பாடு அநீதியை தடுப்பதாக அமையுமென நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க வழங்கிய, கருணாதிலக்க – ஜெயலத் டி சில்வா வழக்குகளும் உள்ளன. அதனால் பாகுபாடு – பாரபட்ச செயற்பாடுகளுக்கு கடுமையாக எதிர்ப்பு வௌியிடப்படுகிறது.

இறுதியாக, பிரதம நீதியரசர் வழங்கிய குற்றவியல் சட்டத் திருத்தம் தொடர்பான விசேட தீர்மானமும் புறக்கணிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில்தான் நாம் பெண்கள் வலுவூட்டல் மற்றும் பெண்களுக்கான சமத்துவம் பற்றிப் பேசுகிறோம்.

ஆனால் ஐந்தாவது நிலையான அபிவிருத்தி இலக்குகளின்படி சிறுபான்மையினரும் பாகுபாடு இன்றி அரச சேவைகளைப் பெறக்கூடிய இயலுமை இருக்க வேண்டும். அடிப்படை உரிமைகளின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் சாதாரண அதிகாரங்களுக்கமைய அவற்றை செயற்படுத்த வேண்டும்.

ஆனால் இந்தத் தீர்மானம் இந்த அதிகாரங்கள் எவற்றையும் கண்டுகொள்ளாத வகையில் அமைந்துள்ளது. ஒருபுறம் நீதிமன்றம் இவை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு தங்களுக்கு இதற்கான அதிகாரம் இருப்பதாகக் கூறிவருகிறது. இதனால், முன்னைய தீர்ப்புகள் அனைத்தும் கேள்விக்குறியாகிறது. நீதிமன்றம் வழங்கிய முந்தைய தீர்ப்புகள் அனைத்தும் தூக்கி எறியப்பட்டுள்ளன என்றே கூற வேண்டும்.

எனவே இது நீதித்துறைக்கு கேடு விளைவிக்கும் செயலை செய்துவிட்டு அதனை ஏற்றுக்கொள்ளுமாறு சொல்வதைப்போல் உள்ளது. ஆனால் இந்த சபையில் அதைச் செய்ய முடியாது. பத்து நீதிபதிகள் கொண்ட குழுவையும் பிரதம நீதியரசரையும் மிஞ்சி அவர்கள் செயற்ட முடியுமா?

இந்தச் சட்டம் ஒரே பாலின திருமணம் மற்றும் பாலின சமத்துவத்தை அனுமதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கும் இந்த சட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதற்கு இடமளிக்கவும் கூடாது. அனைத்து சட்டங்களிலும் காணப்படும் சாதாரண சரத்துக்கள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர். அவற்றை நாம் உள்ளடக்கவில்லை. சட்டமூலத்தை சட்டமா அதிபரே இறுதி செய்கிறார்.

மற்ற சட்டங்களை விட இந்தச் சட்டம் மிகவும் பயனுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இறுதிச் செயற்பாடுகள் நீதிமன்றத்தின் பொறுப்பெனக் கூறப்பட்டுள்ளது. சாமர சம்பத் (இராஜாங்க அமைச்சர் அல்ல) – நீல் இத்தவெல ஆகியோரும் உண்மைகளை குறிப்பிட்டு கூறியுள்ளனர். அதேபோல் நாட்டின் திருமணச் சட்டங்களை ஒரு பகுதிக்காக மட்டும் மாற்ற முடியாது.

அத்தோடு முழுமையாக பிரிவெனா கல்விச் சட்டத்தை இதனால் ஒதுக்கிவிட முடியும் என்று கூறப்படுகிறது. எந்த அடிப்படையில் இதைச் செய்தார்கள் என்று தெரியவில்லை. அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்தில் பௌத்த மதத்தின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அந்த சட்டத்தை தயாரித்து அதை நடைமுறைப்படுத்த பங்களிப்பு வழங்கிய அமைச்சர் என்ற முறையில் எனக்கு அதுபற்றி தெரியும். அந்தச் சட்டம் அரசியலமைப்பின் ஒன்பதாவது பிரிவு மூலம் பாதுகாக்கப்படுகிறது. இதைப் போன்ற ஒரு சிறிய ஏற்பாடு அதை மாற்றும் என்று நினைக்கிறீர்களா? அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில சொற்பதங்களை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர் விளங்கிக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

இந்த சபைக்கு வருவதற்கு முன் தாங்கள் விகாரைக்கோ, பிரிவெனாவிற்கோ சென்று இதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அங்கு என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். இந்த சபையில் மகா சங்கத்தினரும் உள்ளனர். எனவே அவர்கள் குறிப்பிட்டுள்ள இந்த உரிமைகள் மற்றும் பௌத்தர்களின் அனைத்து உரிமைகள் ஒரு சிறிய பகுதிகளை கொண்டு பறிக்கப்படலாம். என்ன நடக்கப் போகிறது? பௌத்த மதத்திற்கான அனைத்து பாதுகாப்புகளும் அகற்றப்படும்.

இறுதியாக, உயர் நீதிமன்றத்தின் அதிகாரம் 1972 அரசியலமைப்புச் சட்டத்தினை திரும்பிப் பார்க்க வேண்டும். எந்தவொரு அதிகாரமும் அரசியலமைப்புச் சபை மற்றும் அது கட்டமைக்கப்பட்ட 1972 அரசியலமைப்பின் மூலம் நியாயப்படுத்தப்பட வேண்டும். அதனால் சட்டம் குறித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியாது. அதன் பெறுமதி பற்றிய ஆலோசனைகளை மட்டுமே வழங்க முடியும்.

இது முழுமையான அரசியலமைப்பு பரிசீலிப்பாகும். 1978 அரசியலமைப்பை உருவாக்குவதில், நீதித்துறையின் சுதந்திரம் மேலும் வலுப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக நமது அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அதிகாரங்கள் உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், 1972 இல் பாராளுமன்றத்தில் ஒரு சட்டமூலத்தை சமர்பித்த பின்னர் இரண்டு வாரங்கள் கடக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று டி.எஸ். பெர்னாண்டோவின் தீர்மானத்தை அறிவித்த வேளையில், அந்தத் தீர்மானத்தைப் இந்தச் சபை பொருட்படுத்தாமல் விட்டது. முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்காரவும் அந்தச் சபையில் அங்கம் வகித்தார்.

பகிரவும்...