Main Menu

உதய கம்மன்பில பிள்ளையானை சந்தித்தது சட்டத்தரணி-யாகவா?, அரசியல் வாதியாகவா? – அமைச்சர் நளின்த ஜயதிஸ்ஸ

சட்டத்தரணி என்ற போர்வையில் ஒரு அரசியல்வாதியாகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையானை) உதய கம்மன்பில சிறையில் வைத்து சந்தித்துள்ளார் என சுகாதார, வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கண்டியில் நடந்த தேசிய எண்ணெய் தேய்க்கும் வைபவத்தை அடுத்து ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உதய கம்மன்பில நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காடியதை அனேகமாக பொதுமக்கள் கண்டிருக்க முடியாது. இந்நிலையில் அவர் பிள்ளையானுக்காக ஆஜராகும் ஒரு சட்டத்தரணியாகக் தன்னைக் கூறிக் கொண்டு அவரை சந்தித்ததில் வேறு கதைகளும் இருக்கலாம். பிள்ளையானுக்கு, உதய கம்மன்பில சட்டத்தரணியானதன் ஊடாக முன்னைய காலங்களில் எந்தளவு ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்பதை ஊகிக்க முடியும்.

பிரபலமான வழங்குகளில் சட்டத்தரணியாகத் தொழிற்படாத ஒருவர் இப்படி இந்த வழக்கிற்கு திடீர் எனத் தோன்ற முற்பட்டார் என்பது சிந்திக்க வேண்டிய விடயம்.

முன்னைய காலங்களில் கீழே ஒதுக்கப்பட்ட பல்வேறு ஊழல்களுக்கான கோவைகள் தற்போது மேல் எடுக்கப்பட்டு குற்றத்தடுப்பு மற்றும் மோசடி ஒழிப்புப் பிரிவினர் செயற்பட ஆரம்பித்துள்ளனர். சட்டரீதியாகச் செய்ய வேண்டியவைகளை நீதித்துறை மேற்கொள்கிறது. அரசு என்ற வகையில் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வேலையை மட்டுமே அரசு செய்கிறது.

கடந்த காலத்தில் அழிவுக்கு உற்பட்ட பல நிறுவனங்களில் சுகாதரத்துறையே முன்னிலையில் உள்ளது. சுகாதாரத்துறையில் இன்று மருந்துகளுக்கு ஏதும் பிரச்சினைகள் என்றால் அது 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பிரதிபலனாகும். அக்காலப்பகுதியில் சரியான முறையில் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படவில்லை.

உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெற்று வெறுமனே உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களை உருவாக்குவது எமது நோக்கமல்ல. கிராமிய மட்டத்தில் அபிவிருத்தி தொடர்பான மாபெறும் மாற்றம் ஒன்றை மேற்கொள்ள உள்ளோம். நாம் மேற்கொள்வது அபிவிருத்தி என்பதை விட பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைப் பெறும் செயற்பாடாகும் என்பது பொருத்தமாகும். கிராம மட்டத்தில் அபிவிருத்திக்கான ஒரு பொறி முறையை அமைக்க முயற்சிக்கிறோம். எனவேதான் அதற்காக நாம் ஆதரவு கேட்கிறோம் என்றார்.

பகிரவும்...