Main Menu

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பது அரசின் புனையப்பட்ட கதை – லக்ஷமன் கிரியெல்ல

ஈஸ்டர் தாக்குதலுக்கு நௌபர் மௌலவி என்பவரே பிரதான சூத்திரதாரி என்பது அரசாங்கத்தினால் புனையப்பட்ட கதையாகக் கூட இருக்கலாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஈஸ்டர் தாக்குதலுக்கும் புலனாய்புப் பிரிவினருக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியின் சர்வதேச சக்திகள் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள போதிலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இதுதொடர்பாக எந்தவொரு தகவலும் வெளிக்காட்டப்படவில்லை என்றும் லக்ஷமன் கிரியெல்ல கூறினார்.

எனினும், இரண்டு வருடங்களுக்கு பின்னர் நேற்று பிரதான சூத்திரதாரியொருவரின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், நௌபர் மௌலவியை ஆணைக்குழு முன்னினையில் சாட்சிக்காக கொண்டுவரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பேராயர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பும் பிரதான சூத்திரதாரி குறித்து கேள்வி எழுப்பும் இச்சந்தர்ப்பத்திலேயே குறித்த நபரின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது என குற்றம் சாட்டிய லக்ஷமன் கிரியெல்ல இந்த கருத்து தொடர்பாக எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை சஹ்ரானுக்கு 2009 இலிருந்து 2015 வரை அரசாங்கத்தால் சம்பளம் வழங்கப்பட்டுள்ள போதும் யார் இதனை வழங்கியது என்பது தெரியாது என்றும் அதற்கான சாட்சியங்கள் ஆணைக்குழு முன்பாக வரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பகிரவும்...