இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் மலையக சாசனம் என்ற பெயரில் ஆவணம் வெளியீடு
மலையக சாசனம் என்ற பெயரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினாலும் ஆவணம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் தலைமையில் நுவரெலியாவில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை கௌரவிக்கும் விதத்தில் இந்த சாசனம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெருந்தோட்ட மக்களுக்கான பொருளாதார முன்னேற்றம், தொழில்வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், காணியுரிமை உள்ளிட்ட விடயங்களை இலக்காகக் கொண்டு இந்த சாசனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களுக்கு உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய தேர்தல்கள் ஆணைக்குழுவினூடாக அந்த பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அதில் பங்கேற்றிருந்தவர்களிடம் பணத்தை அறவிட்டதன் பின்னரே உணவுகளை விநியோகிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறித்த விருந்தக நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.