Main Menu

இலங்கை அபார வெற்றி – புதுமுக வீரர் சாதனை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

அத்துடன் இலங்கை அணியின் புதுமுக வீரராக களமிறங்கிய சுழல் பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம 2 இன்னிங்ஸிலும் மொத்தமாக 11 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் அகில தனஞ்சய 44 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்திருந்த நிலையில் பிரவீன் ஜயவிக்ரம 178 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்களை வீழ்த்தி அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.

இதற்கமைய தனது முதல் இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 493 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 118 ஓட்டங்களையும் மற்றும் லஹிரு திரிமான்ன 140 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

மேலும், ஓசத பெர்ணான்டோ 81 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் டஸ்கின் அஹமட் 4 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 83 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 251 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பாக தமீம் இக்பால் அதிகபட்சமாக 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் தனது முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிரவீன் ஜயவிக்ரம 6 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.

சுரங்க லக்மால் மற்றும் ரமேஷ் மென்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

அதன்படி, 242 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி​ 9 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 66 ஒட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 41 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

இதற்கமைய பங்களாதேஷ் அணிக்கு 437 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் பிரவீன் ஜயவிக்ரம 5 விக்கெட்டுக்களையும் ரமேஷ் மென்டிஸ் 4 விக்கெட்களையும் அதிகபட்சமாக வீழ்த்தி இருந்தனர்.

அதனடிப்படையில் 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி 1 – 0 என்ற ரீதியில் தொடரை கைப்பற்றியுள்ளது.

பகிரவும்...