Main Menu

அமைச்சுப் பதவிக்கு போட்டி – ராஜபக்ஷ குடும்பத்தினரிடையே குழப்பம்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ஷ குடும்பத்தினரிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஆங்கில ஊடகமொன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வசமுள்ள நிதி அமைச்சுப் பதவியை பசில் ராஜபக்ஷ கேட்டுள்ளார் என்றும் ஆனால் அதை பிரதமரும் அவரது குடும்பத்தினரும் நிராகரித்தனர் என்றும் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஜயந்த கெட்டகொட நேற்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜூலை 8ஆம் திகதி அதாவது நாளைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து அமைச்சுப்  பதவியைப் பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

எனினும் பசில் ராஜபக்ஷ நிதி அல்லது ஏனைய அதிகாரமிக்க அமைச்சுப் பதவியைக் கோரியுள்ளதால், இந்த விடயம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து ராஜபக்ஷ சகோதரர்களிடையே விவாதங்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்றும் விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வார் மற்றும் ஒரு அமைச்சுப் பதவியைப் பெறுவார் என்ற செய்திகளைத் தொடர்ந்து அரசாங்கத்திற்குள் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டது.

சில அரசாங்க கூட்டணி கட்சி உறுப்பினர்கள் இந்த நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்தனர். பசில் ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமையை ஒரு காரணம் என்று குறிப்பிட்டு, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...