ஸ்கொட்லாந்தை வீழ்த்தி தொடரை தனதாக்கிய இலங்கை
ஸ்கொட்லாந்து எதிரான இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 35 ஓட்டங்களினால் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஸ்கொட்லாந்து – இலங்கை அணிக்கிடையே இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இடம்பெற்று வந்தது.
இவ்விரு அணிகளுக்கிடையே கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
இந் நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையோயன எடன்பார்க்கில் நேற்று ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்கொட்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை குவித்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தனது கன்னி அரைசதத்தினை பூர்த்தி செய்த அவிஷ்க பெர்னாண்டோ 78 பந்துகளை எதிர்கொண்டு, 3 ஆறு ஓட்டம், 5 நான்கு ஓட்டம் அடங்கலாக 74 ஒட்டத்தையும், அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 88 பந்துகளில் 7 நான்கு ஓட்டம் அடங்கலாக 77 ஓட்டத்தையும், குசல் மெண்டீஸ் 66 ஓட்டத்தையும் மற்றும் லஹுரு திரிமான்ன 44 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் ஸ்கெட்லாந்து அணி சார்பில் பிராட்லி வேல் 3 விக்கெட்டையும், சப்யான் ஷெரீப் 2 விக்கெட்டுக்களையும், டொம் சீல், மார்க் வோட் மற்றும் மைக்கேல் லீஸ்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
323 என்ற வெற்றியிலக்கை நோக்கி ஸ்கொட்லாந்து அணி துடுப்பெடுத்தாடி வர 27.3 ஆவது ஓவரில் மழை குறுக்கிட்டதனால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
அந்த நேரம் ஸ்கெட்லாந்து அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்றிருந்தது. அதன் பின்னர் டக்வெத் லூயிஸ் முறைப்படி ஸ்கெட்லாந்து அணிக்கு வெற்றியிலக்காக 34 ஓவர்களக்கு 235 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் ஸ்கொட்லாந்து அணி 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 199 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால் ஸ்கெட்லாந்து அணி 35 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.
ஸ்கெட்லாந்து அணி சார்பில் மெத்தியூ குரோஸ் 55 ஓட்டத்தையும், ஜோர்ஜ் மன்சி 61 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் நுவான் பிரதீப் 4 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் 2 விக்கெட்டுக்களையும், திஸர பெரேரா மற்றும் இசுறு உதான ஆகியேர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியானது இரண்டு போட்டிள் கொண்ட ஒருநாள் தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், கடந்த மூன்று வருடங்களின் பின்னர் வெற்றிகொண்ட ஒருநாள் தொடர் இதுவாகும்.
கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே ஒரு நாள் போட்டிகளில் இறுதியாக விளையாடிய திமுத் கருணாரத்ன, உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ஸ்கொட்லாந்து அணியுடனான இப்போட்டியின் மூலம் ஒரு நாள் சர்வதேச போட்டி ஒன்றில் முதல் தடவையாக இலங்கை அணியினை வழிநடாத்தும் சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொண்டார்.
அத்துடன் இப்போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பெற்ற லஹிரு திரிமான்ன, 18 மாதங்களின் பின்னரும் ஜீவன் மெண்டிஸ் 4 வருடங்களுக்கு பின்னரும் ஒரு நாள் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றனர்.
குசல் பெரேரா, காயம் ஒன்றில் இருந்து பூரணமாக குணமடையாத நிலையில் அவருக்கு இப்போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.