வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் நினைவு கூறப்பட்டு வரும் நிலையில் மன்னாரிலும் நினைவு கூறப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்றைய தினம் (18) நினைவு கூறப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் பஜார் பகுதியில் இன்று (18) காலை 9 மணியளவில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது.
இதன் போது இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பகிரப்பட்டது.
இதேவேளை, இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்
வவுனியாவிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமண்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று இருந்தது.
இதேவேளை, மட்டக்களப்பு காந்திபூங்காவிலும் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் வி.லவகுகராசாவின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.