Main Menu

யாழ் நவாலி சென்பீற்றஸ் தேவாலயப் படுகொலைகள் – 25ம் ஆண்டு நினைவு நாள்


யாழ்ப்பாணம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயம் மீதான விமானத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

வரலாறு காணாத இடப்பெயர்வைத் தந்த இந்த வருடத்திலேயே நவாலிப் படுகொலையும் சிங்கள அரச படைகளால் அரங்கேற்றப்பட்டது. 1995 யூலை 09ம் நாள் யாழ் மண்ணில் இரத்த ஆறு ஓடிய ஒரு கோரமான கொடிய நாள். அன்று நவாலி சென் பீற்றர்ஸ் மற்றும், சின்னக்கதிர்காமம் என அழைக்கப்பட்ட முருகமூர்த்தி ஆலயம் என்பன அழிக்கப்பட்டு அப்பாவியாக இடம்பெயர்ந்து ஆலயத்தில் தங்கியிருந்த மக்களைக் காவுகொண்ட நாளாகும்.

சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் பணிப்புரையின் பேரில் வலிகாமம் பகுதியில் எறிகணைத் தாக்குதலில் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில் விமானப் படையினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் இனப் படுகொலையாகும். வரலாற்றில் இந்த கறைபடிந்த நாட்களை தமிழினம் என்றும் மறக்காது.

‘லீட் போர்வேட்’ என்னும் பெயர் கொண்ட ‘முன்னேறிப்பாய்தல்’ இராணுவ நடவடிக்கையை வலிகாமம் பகுதியில் தொடங்கிய இராணுவத்தினர் பலாலியில் இருந்தும், அளவெட்டியிலிருந்தும் மிகக் கொடூரமான முறையில் எறிகணைத் தாக்குதல்களையும் குண்டு வீச்சுத் தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்தனர். திடீர் என 1995 யூலை 09ம் நாள் வலிகாமம், தென்மேற்கு வலிகாமம், மேற்கு வலிகாமம், தெற்கு வலிகாமம் என வடக்குப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்களை நோக்கி காலை 5.20 மணியிலிருந்து எறிகணை மற்றும் விமானத் தாக்குதல் பெரும் எடுப்பில் நடாத்தப்பட்டன.

அன்றைய தினம் காலை வலிகாமம் பகுதியில் உள்ள மக்கள் உடுத்த உடுபுடவைகளுடன் கையில் அகப்பட்ட பொருட்களுடனும், கண்ணீருடனும் தங்கள் ஊர்களை விட்டு வெளியேறிய காட்சி மக்கள் மனங்களில் ஒரு வடுவாகவே பதிந்துள்ளது. கால் நடையாகவும், சைக்கில்களிலும் தள்ளுவண்டிகளிலும் மாட்டு வண்டிகளிலும், முச்சக்கர வண்டிகள் மூலமாகவும் வழுக்கையாறுவெளி, நவாலி, ஆனைக்கோட்டை பிரதான வீதி வழியாக கைக்குழந்தைகள், வயோதிபர் முற்றாக எழுந்து நடக்க முடியாதவர்கள் எனப் பலரும் இன்னல்களைச் சுமந்தவண்ணம் சென்றனர்.

தமது உயிர்களைக் பாதுகாக்க தமக்கு வசதி கிடைத்த இடங்களை நோக்கி ஓடிச்சென்றனர். சகல வீதிகளிலும் உலங்குவானூர்திகள் மற்றும் அகோரமான எறிகணை தாக்குதல்களினால் வீதிக்கு வீதி காயமடைந்து இரத்தம் சிந்திக் கொண்டிருந்தவர்களே அதிகம் காணப்பட்டனர். வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்ல வாகன வசதிகளும் இல்லை.

வாகனங்களை இயக்குவதற்கான எரிபொருட்களும் அற்ற ஒரு பெரும் பொருளாதார தடையையே அப்போது காணப்பட்டது. இதேநேரம் காயமடைந்தவர்கள் ஏதோ ஒரு வழியூடாக எடுத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களைக் காப்பாற்ற மருந்தகங்களோ வைத்தியசாலைகளோ இயங்க முடியாத அவல நிலை.

இறுதியில் காயமடைந்த பெருமளவான மக்கள் சிகிச்சை இன்றி இறந்தனர். யாழ் நகரப் பகுதி திசையில் இருந்து அராலி நோக்கி வந்த விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை இரு ஆலயங்கள் மீதும் வீசின. நவாலி பிரதேசம் ஒரு கணம் அதிர்ந்தது. வீதிகள் தடைப்பட்டன. மரங்கள் முறிந்து வீழ்ந்தன அப்பகுதிகள் பெரும் புகை மூட்டமானது. நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயமும் சின்னக் கதிர்காம முருகன் ஆலயமும் மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற விமானக்குண்டு வீச்சுக்களால் அதிர்ந்தன.

அங்கு தமது உயிர்களை காப்பாற்ற இறைவனிடம் தஞ்சம் புகுந்திருந்த விலை மதிப்பற்ற பல அப்பாவித் தமிழ் மக்கள் மிலேச்சத்தனமான தாக்குதலினால் கொல்லப்பட்டதுடன் 360ற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 45 நாள் குழந்தை உட்பட 147 பேர் கொல்லப்பட்டனர்.

இவர்களில் 48 பேர் மனிதாபிமானப் பணியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்தவர்கள். பேரினவாதிகளின் இக்கொடூரத் தாக்குதலில் இவர்களும் சிக்கிப் பலியாகினர்.

இக்கொடூரமான விமானக் குண்டுத் தாக்குதலினால் இரண்டு கிராமசேவையாளர்கள் உட்பட மாணவர்கள், சிறுவர்கள், பொதுப்பணியாளர்கள், பொதுமக்கள் என வயது வேறுபாடின்றி அங்க அவயங்களை இழந்து துடிதுடித்து உயிரிழந்தனர்.

மூளாய், வட்டுக்கோட்டை, மாதகல், சுழிபுரம், சில்லாலை, பண்டத்தரிப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டனர். இரத்தக்கறை

படிந்த இத்துயர சம்பவம் விலைமதிக்க முடியாத மனித உயிர்களைப்பலி கொண்டதுடன் கால்நடைகள், இரண்டு ஆலயங்கள், பாடசாலை, பதினான்கு வீடுகள், நான்கு கடைகள் ஆகியனவும் சேதத்திற்குள்ளாகின.

உடைந்த கோயில் கதவுகளில் வைத்து இறந்தவர்களின் உடல்களை தூக்கியமையும், சதைத்துண்டங்களை சாக்குகளில் அள்ளியமையும், கட்டட இடிபாடுகளிற்குள் சிக்கிய உடல்களை நான்கு நாட்களிற்குப்பின் எடுத்தமையும் இறந்தவர்களின் உடல்களைக் கட்டில்களில் வைத்து யாழ்.நகர் நோக்கி கொணர்ந்தமையும் இன்றும் இம் மக்கள் மனங்களில் நிழலாடுகின்றன.

இறந்த உடல்களுடன் இடம்பெயர்ந்த துயர நிகழ்வு நவாலிப் படுகொலையின் மூலமாகவே ஏற்பட்டதென்பது குறிப்பிடப்பட வேண்டியதொன்று. புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் புதிய தளபதிகளை நியமித்து தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை சிறீலங்கா அரசு மேற்கொண்டமை வரலாற்றின் பக்கங்களில் எழுதப்பட்டுள்ளன. நவாலி சென்பீற்றஸ் தேவாலயம், சின்னக்கதிர்காம முருகன் ஆலயம், றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, குருநகர் புனிதயாகப்பர் தேவாலயம்.

மருதமடு தேவாலயம், நாகர்கோவில் பாடசாலை என தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாக யாழ்ப்பாணத்தில் சிங்களப் படைகள் பறித்தன. வணக்கத்தலங்கள், கல்விக்கூடங்கள் என்ற வேறுபாடின்றி நடாத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல்களினால் சிங்கள பேரினவாதத்தின் கொடிய முகம் அப்போது புலனானது.

இறைவனின் திருத்தலங்களில் தமக்கு பாதுகாப்புக் கிடைக்கும் என்ற இறை நம்பிக்கையில் இருந்தவர்களை இரும்புக்கரம் கொண்டு கொன்றன சிங்களப்படைகள். இக்கொலை அணுகுமுறையே, சிங்கள தேசத்தால் தொடர்ந்தும் தமிழர் தேசம் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

தெ.றஞ்சித்குமார்

-ஈழமுரசு