மதுபானசாலை அனுமதிப் பத்திர விவகாரம் – முன்னாள் எம்.பி சுமந்திரன் அரசாங்கத்திற்கு சவால்

கடந்த அரசாங்கத்தில் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களின் தெளிவான விபரங்களை அரசாங்கம் இதுவரையிலும் வெளிப்படுத்தவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுக்கு துணைபோகும் செயற்பாடாகவே இது அமைவதாக எம்.ஏ சுமந்திரன் கூறினார்.
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு எம்.ஏ சுமந்திரன் கருத்துத் தெரிவித்தார்.
அரசியல் இலஞ்சமாக மதுபானசாலை அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறியதாகவும் எனவே அரசாங்கம் தற்போது யாருடைய சிபாரிசின் கீழ் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தாம் அரசாங்கத்துக்குப் பகிரங்கமாக சவால் விடுவதாகவும் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டார்.
எனவே அரசாங்கம் இதனை வெளிப்படுத்தாதவிடத்து தேசிய மக்கள் சக்தி தரப்பினரும் ஊழலுடன் சம்மந்தப்பட்டவர்கள் என்ற முடிவுக்கே வரமுடியும் எனக் கூறினார்.