‘போர் ஒரு தீர்வல்ல’ – இந்தியா, பாக். பேச்சுவார்த்தை நடத்த முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வலியுறுத்தல்

எந்தவொரு பிரச்சினைக்கும் போர் ஒரு தீர்வாகாது என்பது உண்மை என தெரிவித்துள்ள அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் பிரச்சினைகளை இருதரப்பு உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் மூலம் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதல் கடந்த 7-ம் தேதி முதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாகிகளின் சிறப்பு ஆன்லைன் கூட்டத்தில், பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்து வரும் பதற்றத்தை அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மிகுந்த கவலையுடன் பார்க்கிறது. தேசம் மற்றும் மக்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு தேவையான நடவடிக்கையையும் இது ஆதரிக்கிறது. இந்த நெருக்கடியான காலங்களில், பொதுமக்கள், அரசியல் கட்சிகள், ஆயுதப்படைகள் மற்றும் அரசாங்கம் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஒன்றிணைய வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.
பயங்கரவாதம் மற்றும் அப்பாவி பொதுமக்களைக் கொல்வது ஒரு பெரிய கவலை. இஸ்லாமிய போதனைகள், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் மனித விழுமியங்களில் பயங்கரவாதத்திற்கு முற்றிலும் இடமில்லை. எனவே, நாடுகள் தங்கள் பிரச்சினைகளை இருதரப்பு உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் மூலம் தீர்க்க வேண்டும். எந்தவொரு பிரச்சினைக்கும் போர் ஒரு தீர்வாகாது என்பதும் உண்மை. குறிப்பாக, இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும்போது, போர் சரியானது அல்ல.
அத்தகைய மோதல் இரு நாட்டு மக்களையும் தீர்க்க முடியாத சிரமங்களிலும், துன்பங்களிலும் ஆழ்த்தக்கூடும். எனவே, அனைத்து பிரச்சினைகளையும் உரையாடல் மற்றும் பிற ராஜதந்திர வழிமுறைகள் மூலம் தீர்க்க வேண்டும்.
முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வழக்கம் போல் அதன் வக்பை பாதுகாப்போம் (Save Waqf) பிரச்சாரத்தைத் தொடரும். இருப்பினும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அதன் பொதுக் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் அடுத்த ஒரு வாரத்திற்கு (மே 16 வரை) ஒத்திவைக்கப்படுகின்றன. அதேநேரத்தில், சக குடிமக்களுடனான வட்டமேசை கூட்டங்கள், மதங்களுக்கு இடையேயான உரையாடல்கள், மசூதிகளில் பிரசங்கங்கள், மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்தல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துதல் போன்ற உட்புற நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி தொடரும்.
தற்போதைய மோசமான நிலைமை விரைவில் தீர்க்கப்பட்டு இயல்புநிலை திரும்பும் என்று வாரியம் நம்புகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.