Main Menu

பாடும் நிலா SPB அவர்களின் ஓராண்டு நினைவலைகளில்..! (25/09/2021)

பாடும் நிலா பாலு என்று அன்போடு அழைக்கப்பட்ட, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ஓராண்டு நினைவில் இன்றைய தினம் TRTதமிழ் ஒலி வானொலி சார்பில் அவரை நினைவு கூர்ந்து கொள்கிறோம்.

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம், நடிகர், இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் என பல துறைகளிலும் சாதனை படைத்தவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளின் திரை ரசிகர்களின் நெஞ்சங்களைத் தாலாட்டிய குரலுக்கு உரியவர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள நெல்லூரில் (கொனேட்டம்பட்டு) எஸ்.பி. சாம்பமூர்த்தி – சகுந்தலாம்மா என்பவர்களுக்கு மகனாக பிறந்துள்ளார். அவரது தந்தை எஸ்.பி. சாம்பமூர்த்தி ஒரு ஹரிகாதா கலைஞராக இருந்து பல நாடகங்களில் நடித்துள்ளார். இவருக்கு எஸ்.பி. சைலாஜா உட்பட இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் உள்ளனர். பாலசுப்பிரமணியம் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்திரி, மகள் பல்லவி, மகன் எஸ். பி. பி. சரண். சரண் பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளர்ந்து வருகிறார்
தந்தை எஸ்.பி. சாம்பமூர்த்தி ஒரு ஹரிகதா கலைஞர்.1946 ஜூன் 4ஆம் தேதி பிறந்த, எஸ்.பி.பி., சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டிருந்ததால், அதன் சில கூறுகளைக் கற்றுக்கொண்டிருந்தார்.

பிறகு, பொறியியல் படிப்பதற்காக அனந்தபூரில் உள்ள ஜேஎன்டியு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். பிறகு அங்கிருந்து விலகி, சென்னையில் உள்ள அசோஸியேட் மெம்பர் ஆஃப் தி இன்ஸ்ட்டிடியூஷன் ஆஃப் எஞ்சினீயர்சில் இணைந்து பொறியியல் படிப்பை படித்தார்.

படிக்கும் காலத்திலேயே பல்வேறு பாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பாலசுப்ரமணியம், 1964ல் மெல்லிசைக் கச்சேரி குழுக்களுக்கான பாட்டுப் போட்டி ஒன்றில் கலந்துகொண்டு முதல் பரிசைப் பெற்றார். அந்தப் போட்டிக்கு நடுவர்களாக இருந்தது தெலுங்கு இசையமைப்பாளர் எஸ்.பி. கோதண்டபாணியும் பாடகர் கண்டசாலாவும்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு எஸ்.பி. கோதண்டபாணி இவருக்கு குருவும் வழிகாட்டியுமானார். அவர் இசையமைத்த “ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாத ராமண்ணா” என்ற தெலுங்கு படத்தில் தன் முதல் பாடலைப் பாடினார் எஸ்.பி.பி.

இந்தப் படம் 1966 டிசம்பரில் வெளியானது. இதற்குப் பிறகு தமிழில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த ‘ஹோட்டல் ரம்பா’ என்ற படத்தில் எல்.ஆர். ஈஸ்வரியோடு இணைந்து ‘அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு’ என்ற பாடலைப் பாடினார்.

ஆனால், அந்தப் படம் வெளியாகவேயில்லை. நடுவில் கன்னட திரைப்படங்களில் பாட ஆரம்பித்திருந்தார் எஸ்.பி.பி.

தமிழில் இவர் பாடி வெளியான முதல் பாடல், எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் படத்தில் வரும் ‘ஆயிரம் நிலவே வா’ பாடல்தான்.

இந்தப் பாடல் வெளியாவதற்கு முன்பாகவே ‘இயற்கையெனும் இளைய கன்னி’ பாடலை சாந்தி நிலையம் படத்திற்காகப் பாடியிருந்தார். அந்தப் படம் 1969 மே 23ஆம் தேதி வெளியானது.

ஆனால், “அடிமைப்பெண்” மே 1ஆம் தேதியே வெளியாகிவிட்டதால், தமிழில் எஸ்.பி.பி பாடி முதலில் வெளியான பாடல், ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல்தான். இதற்குப் பிறகு மலையாளத் திரையுலகிலும் அறிமுகமானார் எஸ்.பி.பி.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் தமிழ் திரையிசைப் பாடல்களில் டி.எம். சௌந்தர்ராஜனின் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர். சிவாஜி ஆகிய இரு உச்ச நட்சத்திரங்களுக்குமே டி.எம்.சௌந்தர்ராஜனே பாடிக்கொண்டிருந்தார்.

உச்ச நட்சத்திரங்கள் இருவருக்கும் வேறு குரலை பாட வைத்தால் ரசிகர்கள் ஒப்புக்கொள்வார்களா என்ற தயக்கம் இயக்குனர்களுக்கும் இசை அமைப்பாளர்களும் இருந்ததால், நீண்ட காலமாக டி.எம்.சௌந்தர்ராஜனுக்கு மாற்றே இல்லை என்ற நிலை இருந்தது. இந்த நிலையில்தான் அடிமைப் பெண் படத்திற்குப் பிறகு, எல்லாவிதமான பாடல்களையும் உயிரோட்டத்துடன் பாடும் தன்னுடைய திறனால் மெல்ல மெல்ல தமிழ்த் திரையுலகில் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தார் எஸ்.பி.பி.

1970களின் பிற்பகுதியில் அப்போதுதான் அறிமுகமாகியிருந்த இளையராஜாவின் இசையில் பாட ஆரம்பித்தார் எஸ்.பி.பி. இளையராஜா – எஸ்.பி. பாலசுப்ரமணியம் – எஸ். ஜானகி என்ற இந்தக் கூட்டணியில் அமைந்த பாடல்கள், தமிழ் திரையிசை ரசிகர்களால் ஒரு போதும் மறக்க இயலாதவை.
அனிருட்டா (ஹார்மோனியத்தில்), இளையராஜா (கிதார் மற்றும் பின்னர் ஹார்மோனியம்), பாஸ்கர் (தாளத்தில்), மற்றும் கங்கை அமரன் (கிதாரில்) ஆகியோரைக் கொண்ட ஒரு ஒளி இசை குழுவின் தலைவராக இருந்துள்ளார் பாலசுப்ரமணியம்.
சுருக்கமாகச் சொன்னால், தமிழ், தெலுங்கு, கன்னட சினிமா பாடல்களில் கடந்த நூற்றாண்டின், கடைசி முப்பது ஆண்டுகள் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தினுடையவை.

ஒரு கட்டத்தில் ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார் எஸ்.பி.பி.

1981 பிப்ரவரி எட்டாம் தேதியன்று உபேந்திர குமார் இசையமைத்த 17 கன்னடப் பாடல்களை காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் பாடி முடித்தார். ஒரே நாளில் 19 தமிழ், தெலுங்கு பாடல்களையும் இந்தி இசையமைப்பாளர் ஆனந்த் மற்றும் மிலிந்த் இசையமைத்த 16 இந்திப் பாடல்களையும் ஒரே நாளில் பாடி சாதனை படைத்தார்.

1980ல் வெளிவந்த சங்கராபரணம் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் புகழை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்த இந்தப் படம் சாஸ்த்ரீய இசையை அடிப்படையாகக் கொண்டிருந்த படம். எஸ்.பி. சாஸ்த்ரீய இசையை முறைப்படி படித்தவர் இல்லை என்றாலும் இந்தப் படத்திற்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை வென்றார் எஸ்.பி.பி.

தெலுங்கில் சிரஞ்சிவி நடித்த படங்களுக்கும் தமிழில் ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கும் பெரும்பாலான டைட்டில் பாடல்கள் எஸ்பிபி பாடியதுதான்.

எஸ்.பி.பி. தன் பாடல்களுக்காகத்தான் பெரிதும் அறியப்பட்டவர் என்றாலும் அவர் ஒரு சிறந்த இசையமைப்பாளரும்கூட. தவிர, நல்ல நடிகர், சிறப்பான பின்னணி குரல் கொடுப்பவர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞர் எஸ்பிபி. தமிழ், தெலுங்கு, கன்னடம் என 45க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் எஸ்.பி.பி.

கிளாசிக்கல் பயிற்சி பெற்ற பாடகர் அல்ல, அவர் பாடல்களைப் பதிவு செய்வதில் “திரைப்பட இசை” அழகியலைப் பயன்படுத்தினார். பாலசுப்ரமணியம் தனது படைப்புகளுக்காக சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான முதல் தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.

ஹிந்தி படங்களில் அவரது முதல் படைப்பு அடுத்த ஆண்டில், ஏக் துஜே கே லியே (1981) இல் இருந்தது, இதற்காக அவர் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான மற்றொரு தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.
சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை இதுவரை ஆறு முறை வென்றிருக்கிறார் எஸ்பிபி. இவர் பெற்ற மாநில அரசு விருதுகளுக்கும் தனியார் விருதுகளுக்கும் கணக்கே கிடையாது. தன்னுடைய ஐம்பதாண்டு கால தொழில் வாழ்க்கையில் எல்லா மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 40,000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் எஸ்.பி.பி. கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே.

பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார்.

இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறை பெற்று சாதனை படைத்துள்ளார்.

நான்கு பல்கலைக்கழகங்களால் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். மேலும் இந்திய அரசின் பத்மபூஷன் விருதையும் பெற்றவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இந்தியாவில் உள்ள 15 மொழிகளில் பாடியிருக்கும் எஸ்.பி.பி. சமஸ்கிருதப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

சாகரசங்கமம், ஸ்வாதிமுத்யம் ஆகிய இரண்டு படங்கள் தவிர, கமல்ஹாசன் நடித்து தமிழில் இருந்து தெலுங்கிற்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட எல்லாப் படங்களில், கமல்ஹாசனுக்கு குரல் கொடுத்தவர் எஸ்.பி.பிதான். ரஜினிகாந்திற்கும் சில தெலுங்கு படங்களில் குரல் கொடுத்திருக்கிறார்.

இவருக்கு ஆகஸ்ட் 5, 2020 அன்று, கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் மோசமடைந்த அவரது உடல்நிலை, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்தது மற்றும் வாய் வழியே சாப்பிடும் அளவுக்கு இவருடைய உடல்நிலை தேறியது. ஆனால் திடீரென்று செப்டம்பர் 24, 2020 அன்று, இவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததை தொடர்ந்து, இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், செப்டம்பர் 25, 2020 அன்று, இவருடைய உயிர் மதியம் 1:04 மணிக்கு பிரிந்தது

பின்னணி பாடுவதில் மட்டுமல்லாமல், திரைத்துறையின் பல்வேறு அம்சங்களிலும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அளித்த பங்களிப்புக்கு இணையாக வெகு சிலரையே காட்ட முடியும். இப்போதும் ஒவ்வொரு இரவிலும் அவரது குரலைக் கேட்காமல் தூங்கச் செல்லும் இல்லங்கள் மிகக் குறைவு. நெஞ்சில் நிறைந்த கானங்கள் மூலம் SPB இன்றும் எம் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் என்றால் மிகையில்லை

“இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்”

இன்றைய தமிழ் ஒலி வானொலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்
Bondy இல் வசிக்கும் தேவசகாயம் (பாபு) அவர்களுக்கும் எமது நன்றிகள்