பயங்கரவாத தாக்குதலின் விசாரணைக்கான தெரிவுக்குழுவை நியமிக்கும் யோசனை இன்று நாடாளுமன்றில்
உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதன் பின்னர் நாட்டின் நிலவரம், என்பன குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவு குழு அமைப்பது குறித்த யோசனை இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
நேற்று இடம்பெற்ற ஆளுங்கட்சித் தரப்பினருக்கு இடையிலான கலந்துரையாடலின் போது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த யோசனை சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்படவுள்ளது.
சபை முதல்வரினால் குறித்த யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பின்னர், எதிர்கட்சியினர் அதனை எதிர்த்தால் குறித்த யோசனை வாக்கெடுப்புக்கு விடப்படும்.
அதற்கமைய, ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று பிற்பகல் 3.00 மணியளவில், நாடாளுமன்ற குழு அறைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் யோசனை நிறைவேற்றப்பட்டதன் பின்னர், சபாநாயகரினால், குறித்த தெரிவுக் குழுவிற்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.
குறித்த தெரிவுக்குழுவிற்கு தலைவராக ஆளுந்தரப்பினால், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறித்த தெரிவு குழுவின் உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 15 ஆகும்.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியின் இணக்கபாட்டுக்கு அமைய அந்த தெரிவு குழுவின் இறுதி அறிக்கை சமர்பிப்பதற்கான காலம் தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.