பயங்கரவாதத்தை எதிர்க்கொள்ள இலங்கைக்கு ஜப்பான் முழு ஒத்துழைப்பு!
உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்க்கொள்வதற்கு இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஜப்பான் தயாராக இருப்பதாக ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் டொசிகோ அபே (Mrs.Toshiko abe) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பாதுகாப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் இரு நாடுகளும் கவனம் செலுத்தி உள்ளன. இது சர்வதேச பயங்கரவாத செயற்பாடுகள் நாட்டில் இடம்பெறுவதை தடுப்பதற்கு முக்கிய நடவடிக்கையாக அமையும் என்று இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அபேக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று காலை கொழும்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் பாதுகாப்பு நடவடிக்கைள் தொடர்பில் ஜப்பான் வழங்கும் ஒத்துழைப்புக்கு இலங்கை நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.
இந்தியா, மாலைத்தீவு மற்றும் இலங்கை ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். இலங்கையில் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா மற்றும் ஜப்பானுடன் கூட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் ஜப்பான் தூதுவர் அகிர சுகியாம (Mr.Akira Sugiyama) தூதுவர் அலுவலகத்தின் அதிகாரி டிகெசி ஒசாகி மற்றும் ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் சிலரும் கலந்துக்கொண்டனர்.