நினைவேந்தல் நிகழ்வுக்கு தயார் நிலையில் முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலில் இடம்பெறவுள்ளது.
2009ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் முடிவுக்கு வந்த போரில், ஆயிரக்கணக்கான மக்கள் கொன்றழிக்கப்பட்டதை, உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் இன்று நினைவு கூருகின்றனர்.
முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில், இன்று காலை 10.30 மணியளவில், நினைவேந்தல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நினைவுச்சுடர் ஏற்றி, அமைதியான முறையில் வணக்கம் செலுத்தும் இந்த நிகழ்வில் அனைவரையும் பங்கேற்று அஞ்சலி செலுத்துமாறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
முள்ளிவாய்க்கால் நினைவுத் திடல் பகுதியில் சிவப்பு மஞ்சள் வண்ண கொடிகள் பறக்கவிடப்பட்டு, அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அங்கு நினைவேந்தல் நிகழ்வை அமைதியான முறையில் நடத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைத் தடுக்கமாட்டோம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
எனினும், நேற்று பிற்பகல் தொடக்கம், முள்ளிவாய்க்காலுக்குச் செல்லும் பிரதான வீதிகளில் புதிய இராணுவ சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வட்டுவாகல் பாலத்திலும், வலைஞர்மடம் சந்தியிலும் அமைக்கப்பட்டுள்ள சோதடினைச் சாவடிகளில் இராணுவத்தினர். நேற்று தொடக்கம் பொதிகளைச் சோதனையிடுவதுடன், முள்ளிவாய்க்கால் நோக்கிச் செல்பவர்களின் பெயர்களையும் பதிவு செய்து வருகின்றனர்.