Main Menu

‘திமுகவின் வாரிசு அரசியலை மக்களிடம் பாஜக எடுத்துச் செல்லும்’ – வானதி சீனிவாசன்

திமுகவின் வாரிசு அரசியல் விவகாரத்தை மக்களிடம் பாஜக தீவிரமாக எடுத்துச் செல்லும் என, வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி வீட்டில் ‘பிரதமரின் மனதின் குரல்’ நிகழ்ச்சியை கட்சியினருடன் அமர்ந்து பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ நேற்று பார்த்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுகவில் மூத்த அமைச்சர்கள் பலர் இருக்கும் போதும், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி இருப்பது வாரிசு அரசியலை எடுத்துக் காட்டுகிறது.

திமுக-வில் மற்றவர்கள் எத்தனை ஆண்டுகள் உழைத்தாலும் அவர்களால் சாதாரண உறுப்பினர்களாக மட்டுமே நீடிக்க முடியும். குற்றம் சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தவருக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணையை வலுவிழக்க செய்ய முடியும். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை மீண்டும் அமைச்சர் ஆக்குவதையும், மூன்றில் ஒரு பங்கு ஊழல் குற்றச்சாட்டு உள்ள அமைச்சர்களை வைத்துக்கொண்டு நேர்மையான ஆட்சி வழங்குவோம் என முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் கூறுவதையும் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தாலும் மத்திய அமைச்சராகவும், முதலமைச்சராகவும் உயர்ந்த பொறுப்புகளை வழங்கும் ஜனநாயகம் மிக்க ஒரே கட்சியாக பாரதிய ஜனதா உள்ளது. திமுகவின் வாரிசு அரசியல் விவகாரத்தை பாஜக தீவிரமாக மக்களிடம் எடுத்துச் செல்லும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, உலக இதய தினத்தை முன்னிட்டு, கோவை பந்தய சாலை பகுதியில் தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நடைபயணத்தில் வானதிசீனிவாசன் பங்கேற்றார்